ரூ.10 லட்சத்தில் புதிய தரைப்பாலம்

கம்பம் நகராட்சியில் புதிய பாலம் கட்டுவதற்கு ரூ.10 லட்சம் நிதியை ரவீந்திரநாத் எம்.பி. ஒதுக்கீடு செய்துள்ளார்.;

Update: 2023-06-22 19:30 GMT

கம்பம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் 29, 30-வது வார்டுகளில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வாய்க்கால் மூலம் கம்பம்- குமுளி சாலையில் குலாலர் மண்டபம், ஆதிசக்தி விநாயகர் கோவில் தெரு சந்திப்பு வழியாக செல்கிறது. இந்த சாலை சந்திப்பில் தரைப்பாலம் ஒன்று இருந்தது. அந்த பாலம் சேதம் அடைந்தது. அதனை நகராட்சி நிர்வாகத்தினர் இடித்து அகற்றினர். அதன் பின்பு புதிய பாலம் கட்டப்படவில்லை. இதனால் அந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அந்த பகுதியில் தரைப்பாலம் கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து 26-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் வா.செந்தில் என்பவர் தரைப்பாலம் கட்டவேண்டும் என்று ஓ.ப.ரவீந்திரநாத் எம்.பி.யிடம் கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்று கம்பத்திற்கு நேரில் வந்து தரைப்பாலம் கட்டும் இடத்தை ரவீந்திரநாத் எம்.பி. பார்வையிட்டார். அவருடன் மாவட்ட செயலாளர் சையது கான், கம்பம் தெற்கு நகர செயலாளரும், கவுன்சிலருமான செந்தில், வடக்கு நகர செயலாளர் ஜெகதீஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பின்னர் தரைப்பாலம் கட்டுவதற்கான திட்ட மதிப்பீடு குறித்து நகராட்சி உதவி என்ஜினீயர் சந்தோசிடம், ரவீந்திரநாத் எம்.பி. கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து தரைப்பாலம் கட்டுவதற்கு தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து தரைப்பாலம் கட்டும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  

Tags:    

மேலும் செய்திகள்