புதிய தொழில் முனைவோர் மேம்பாட்டுதிட்டத்தில் கடன் பெற வயது வரம்பு உயர்வு
புதிய தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தில் கடன் பெற வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தில் கடன் பெற வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் படித்த, தொழில் தொடங்க விருப்பமுள்ள முதல் தலைமுறையினர் பயன்பெறும் வகையில் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் சுய வேலை வாய்ப்புத் திட்டமான புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.
இந்த திட்டத்தின் கீழ் தமிழக அரசு ரூ.5 கோடி வரையிலான திட்ட முதலீட்டிற்கு 25 சதவீதம் அதிகபட்ச மானியமாக ரூ.75 லட்சம் வரை வழங்கி வருகின்றது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பம் உள்ள முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் பிளஸ்-2 வகுப்பு தேர்ச்சி, தொழில் கல்வி, பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, ஐ.டி.ஐ. படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தற்போது இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற பொது பிரிவினருக்கு 35 வயதில் இருந்து 45 வயதாகவும், சிறப்பு பிரிவினருக்கு 45 வயதில் இருந்து 55 வயதாகவும் வயது வரம்பு உயர்த்தப்பட்டு ஆணைகள் பெறப்பட்டு உள்ளன.
எனவே இந்த திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த நபர்கள் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணைய தளத்தில் விண்ணப்பித்தினை பதிவிறக்கம் செய்து இரு நகல்களாக மாற்று சான்றிதழ், கல்வி தகுதி சான்று, விரிவான திட்ட அறிக்கை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, ஜாதி சான்று, விலைப்புள்ளி மற்றும் புகைப்படம் 2 ஆகிய இணைப்புகளுடன் திருவண்ணாலை மாவட்ட தொழில் மையம் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு திருவண்ணாமலை வேளாண்மைத் துறை இணை இயக்குனர் அலுவலகம் அருகில் உள்ள மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை அணுகி பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.