புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஈரோட்டுக்கு கொண்டுவரப்பட்டன

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஈரோட்டுக்கு கொண்டு வரப்பட்டன.

Update: 2023-06-24 21:51 GMT

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஈரோட்டுக்கு கொண்டு வரப்பட்டன.

புதிய வாக்குப்பதிவு எந்திரங்கள்

நாடு முழுவதும் வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த தொகுதிக்கு அனுப்பும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்துவதற்காக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பெல் நிறுவனத்தில் இருந்து புதிய வாக்குப்பதிவு எந்திரங்கள் ராஜஸ்தான் மாநில பதிவெண் கொண்ட லாரியில் சீல் வைக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டன.

கலெக்டர் ஆய்வு

இந்த லாரி நேற்று காலையில் ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு கிடங்குக்கு வந்தடைந்தது. இதைத்தொடர்ந்து தேர்தல் பிரிவு தாசில்தார் சிவகாமி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் லாரியில் வைக்கப்பட்டு இருந்த 'சீல்' உடைக்கப்பட்டு, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்த்து பாதுகாப்பு கிடங்குகளில் பத்திரமாக வைக்கப்பட்டன.

இதுகுறித்து தேர்தல் பிரிவு தாசில்தார் கூறும்போது, 'வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்துவதற்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் 1,400-ம் மற்றும் கட்டுப்பாட்டு கருவி 1,000-மும் பெங்களூரில் உள்ள பெல் நிறுவனத்தில் இருந்து வந்துள்ளன. இவைகள் இறக்கப்பட்டு, பாதுகாப்பு கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் ஈரோட்டுக்கு புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வரவேண்டி உள்ளது. முழுவதுமாக வந்த பின் அவைகள் சரியாக இயங்குகிறதா? என்று சரிபார்க்கப்படும்' என்றார்.

இதற்கிடையில் புதிதாக இறங்கி வைக்கப்பட்டு உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை, ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்