'வைகை அணையில் இருந்து ரூ.680 கோடியில் புதிய குடிநீர் திட்டம்'
திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்கு வைகை அணையில் இருந்து ரூ.680 கோடியில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
திண்டுக்கல்லில் நடந்த பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-
திண்டுக்கல் மாவட்டத்தில் விடுபட்ட பாதாள சாக்கடை திட்டத்துக்கு ரூ.206 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் ரூ.131 கோடியில் குடிநீர் குழாய்கள் புதிதாக மாற்றப்பட உள்ளன. இதன் மூலம் தினமும் 20 எம்.எல்.டி. (ஒரு எம்.எல்.டி. என்பது 10 லட்சம் லிட்டர்) தண்ணீர் கூடுதலாக கிடைக்கும். திண்டுக்கல், தேனி மாவட்ட குடிநீர் பிரச்சினையை தீர்க்க வைகை அணையில் புதிய குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூ.680 கோடியில் ஆய்வு பணி நடக்கிறது. குஜிலியம்பாறை, வடமதுரையில் குடிநீர் திட்டத்துக்காக ரூ.1,500 கோடியில் ஆய்வுப்பணி நடக்கிறது.
இதேபோல் சாலை, மழைநீர் வடிகால், பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளும் திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழைக்காலத்தில் குளங்களில் தண்ணீரை சேமித்து வைத்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல்லில் நூலகத்தோடு அறிவுசார் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிற மாவட்டங்களுக்கு தேவைப்பட்டாலும் அமைத்து கொடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார். பேட்டியின்போது அமைச்சர் செந்தில்பாலாஜியின் உறவினர் வீடுகளில் வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்டது குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதில் அளிக்க அமைச்சர் மறுத்து விட்டார். மேலும் தனது துறை சார்ந்த கேள்விகளை மட்டும் கேட்குமாறு சொல்லியபடி அங்கிருந்து அவர் நகர்ந்து சென்று விட்டார்.