ரூ.70½ கோடியில் புதிய கலெக்டர் அலுவலக கட்டிடம்

விருதுநகரில் ரூ.70½ கோடியில் புதிய கலெக்டர் அலுவலக கட்டிடத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அடிக்கல் நாட்டுகிறார்.

Update: 2022-09-13 19:27 GMT

விருதுநகரில் ரூ.70½ கோடியில் புதிய கலெக்டர் அலுவலக கட்டிடத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அடிக்கல் நாட்டுகிறார்.

கலெக்டர் அலுவலக கட்டிடம்

விருதுநகர் குமாரசாமி ராஜாநகரில் உள்ள கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் புதிய கலெக்டர் அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு கடந்த ஆண்டு வருவாய்த்துறை மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டது.

இக்கட்டிடம் விரைவில் கட்டி முடிக்கப்பட்டு கலெக்டர் அலுவலகம் அங்கு செயல்படுமென்றும் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சட்டசபையில் அறிவித்தார்.

இதனைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் புதிய கலெக்டர் அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான வரைபடம் மற்றும் மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.

நிதி ஒதுக்கீடு

இதற்காக ரூ. 70.57 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த புதிய கலெக்டர் அலுவலக கட்டிட அடிக்கல் நாட்டு விழா நாளை (வியாழக்கிழமை) காலை கலெக்டர் அலுவலக பெருந்திட்டவளாகத்தில் நடைபெற உள்ளது. முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் விழாவில் கலந்து கொண்டு புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி திட்ட பணியை தொடங்கி வைக்கிறார்.

இக்கட்டிடம் 6 தளங்களுடன் மொத்தம் 2 லட்சத்து 2 ஆயிரத்து 496 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட உள்ளது. விழாவில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சர்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்