மண்டபம் அருகே புதிய சோதனைச்சாவடி

இலங்கைக்கு பொருட்கள் கடத்தி செல்வதை தடுக்க மண்டபம் அருகே புதிய சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-05-17 18:45 GMT

பனைக்குளம், 

இலங்கைக்கு பொருட்கள் கடத்தி செல்வதை தடுக்க மண்டபம் அருகே புதிய சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது.

இலங்கைக்கு கடத்தல்

தமிழக கடற்கரை பகுதிகளிலேயே ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதி முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளது. அதிலும் குறிப்பாக ராமேசுவரத்திற்கு மிக அருகாமையில் இலங்கை பகுதி உள்ளதோடு மட்டுமல்லாமல் ராமேசுவரம் கடல் வழியாக இலங்கைக்கு அவ்வப்போது கஞ்சா, கடல்அட்டை, பீடிஇலை உள்ளிட்ட பல விதமான பொருட்கள் கடத்தப்படுகின்றன.

அதுபோல் இலங்கையில் இருந்து தங்க கட்டிகள் கடத்தி வரப்படுவதுடன் கடத்தல்காரர்களும் அவ்வப்போது வந்து செல்கின்றனர். அதுபோல் ராமநாதபுரம் மாவட்டத்திலேயே பாம்பன், மண்டபம், மரைக்காயர் பட்டினம், வேதாளை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் இருந்தே பலவிதமான பொருட்களை கடத்தல்காரர்படகு மூலம் இலங்கைக்கு கடத்திக் கொண்டு செல்கின்றனர்.

சோதனை சாவடி

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதி வழியாக நடைபெறும் கடத்தலை தடுப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின் பேரில் மண்டபம் உச்சிப்புளிக்கும் இடைப்பட்ட சுந்தரமுடையான் கிராமத்தில் புதிதாக சோதனை சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த சோதனை சாவடியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாகவே போலீசார் இரவு பகலாக அங்கேயே தங்கி இருந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக சந்தேகப்படும்படியான கார், வேன் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தியும் தீவிரமாக சோதனை செய்து வருவதோடு அந்த வாகனங்களின் பதிவு எண், டிரைவர் பெயர், எந்த ஊரில் இருந்து வருகிறது. எத்தனை பேர் வருகிறார்கள் உள்ளிட்ட விவரங்களையும் பதிவு செய்து அதன் பின்னரே அந்த வாகனங்கள் செல்ல அனுமதிக்கின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் அனைத்து வாகனங்களையும் போலீசார் தீவிர சோதனைக்கு பின்னரே ராமேசுவரம் பகுதிக்குள் அனுமதிக்கின்றனர்.

கடத்தல் தடுப்பு

குறிப்பாக மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும் கடத்தல்காரர்கள் பீடி இலை, பீடி பண்டல், கஞ்சா உள்ளிட்ட பலவிதமான பொருட்களை கார் உள்ளிட்ட பல வாகனங்களில் ஏற்றி அந்த கடத்தல் பொருட்களை இந்த சாலை வழியாகவே வேதாளை, மண்டபம், பாம்பன் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளுக்கு கொண்டு வருகின்றனர். இது போன்று கடத்தல் பொருட்களை வாகனங்களில் கொண்டு வருவதை முன்கூட்டியே நிறுத்தி சோதனை செய்து தடுக்கும் வகையில் இந்த சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Tags:    

மேலும் செய்திகள்