இலஞ்சி குமாரர் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம்
இலஞ்சி குமாரர் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.;
இலஞ்சி குமாரர் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
குமாரர் கோவில்
தென்காசி அருகே இலஞ்சியில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் ஒன்றான இலஞ்சி குமாரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் இரண்டு தேர்கள் இருந்தன. சித்திரை மாதந்தோறும் இக்கோவில் தேரோட்டம் நடைபெற்று வந்தது. இதில் பெரிய தேரில் முருகனும், சிறிய தேரில் சிவன்- அம்பாளும் வலம் வருவார்கள்.
இந்த நிலையில் கடந்த 1994-ம் ஆண்டு பெரிய தேர் பழுதடைந்துவிட்டது. அதன் பிறகு தேரோட்டத்தின் போது சிறிய தேரில் முருகன் ஒரு முறையும், சிவன் -அம்பாள் ஒரு முறையும் இரண்டு முறை ரத வீதிகளில் சுற்றிவர ஏற்பாடு செய்யப்பட்டு அதன்படி தேரோட்டம் நடந்து வந்தது.
தேர் வெள்ளோட்டம்
தற்போது சுமார் 29 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பகுதியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் வெளியூரில் உள்ளவர்கள் நன்கொடை உதவியுடன் பல லட்சம் செலவில் புதிதாக தேர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேரின் வெள்ளோட்டம் நேற்று நடைபெற்றது.
இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலையில் சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கலசங்கள் வலம் வந்து ரத அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மேள தாளங்கள், அதிர்வேட்டுகள் முழங்க புதிய தேர் நிலையத்தில் இருந்து காலை 10.40 மணிக்கு புறப்பட்டது. பக்தர்கள் அரோகரா என்ற பக்தி கோஷங்களை எழுப்பி தேரை இழுத்தனர். தேர் 4 ரவிவீதிகளிலும் சுற்றி 11.30 மணிக்கு மீண்டும் நிலையத்தை அடைந்தது.
திரளான பக்தர்கள் பங்கேற்பு
நிகழ்ச்சியில் பழனி நாடார் எம்.எல்.ஏ., இந்து சமய அறநிலைய துறை இணை ஆணையர் அன்புமணி, கோவில் நிர்வாக அதிகாரி சுசிலா ராணி, தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், குற்றாலம் தொழிலதிபர்கள் டி.ஆர். என்ற டி. ராஜேந்திரன், அருணாச்சலம், வால்ஜி பட்டேல், முன்னாள் ரோட்டரி கவர்னர் ஆறுமுக பாண்டியன், இலஞ்சி பாரதி, மாரிமுத்து சாமி, ஆறுமுகம் பிள்ளை, அம்பை அஜித்குமார், கோவை சங்கர், மதுரை அரசு கூடுதல் தலைமை வக்கீல் வீரா கதிரவன், சிவகாசி டென்சிங், இலஞ்சி பேரூராட்சி தலைவி சின்னத்தாய் சண்முகநாதன், துணைத் தலைவர் முத்தையா, ஸ்தபதி பரத் நாகமுத்து, அஜந்தா சந்திரன், என்ஜினீயர் கோபி மற்றும் தென்காசி, இலஞ்சி, குற்றாலம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர்.