கொரநாட்டுக்கருப்பூர் சுந்தரேஸ்வரர் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம்
கொரநாட்டுக்கருப்பூர் சுந்தரேஸ்வரர் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம்;
கொரநாட்டுக்கருப்பூர் சுந்தரேஸ்வரர் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
புதிய தேர் வெள்ளோட்டம்
கும்பகோணம் அருகே கொரநாட்டுக்கருப்பூரில் பெட்டி காளியம்மன் என்று அழைக்கப்படும் சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 1943-ம் ஆண்டு வைகாசி மாதம் விசாக நட்சத்திர தினத்தில் தேரோட்டம் நடைபெற்றது. பின்னர் தேர் சிதிலமடைந்ததால் தேரோட்டம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக புதிய தேர் உருவாக்கப்பட்டது. தேர் வடிவமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று தேர் வெள்ளோட்டம் நடந்தது.
இதையொட்டி யாகசாலையில் இருந்து புனித நீர் கலசங்களை மங்கல வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கொண்டு எடுத்து சென்று தேரில் பிரதிஷ்டை செய்தனர். தொடர்ந்து கடந்த 80 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.
பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
தேர் வெள்ளோட்டத்தை தருமை ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், சூரியனார் கோவில் ஆதீனம் 28-வது குருமகா சன்னிதானம் மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் திருவடிக்குடில் சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புதிய தேரை வடம் பிடித்து இழுத்தனர்