6 மாதமாகியும் புதிய கட்டிடம் கட்டப்படாத நிலை

பழுதடைந்த பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டு 6 மாதமாகியும் புதிய கட்டிடம் கட்டப்படவில்லை.

Update: 2022-10-13 18:45 GMT

காரைக்குடி, 

காரைக்குடி அருகே மொட்டையன்வயல் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வந்தது. இதில் மொத்தம் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்தனர். பள்ளி கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் கடந்த 6 மாதத்திற்கு முன்பாக கட்டிடம் அனைத்தும் ஜே.சி.பி. எந்திரம் மூலம் முற்றிலும் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்காக அங்கு செங்கல் உள்ளிட்ட பொருட்கள் வந்து இறக்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரை புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் ஏதும் தொடங்காமல் உள்ளதால் அருகில் உள்ள நூலகத்தில் தற்காலிகமாக பள்ளி இயங்கி வருகிறது. இதனால் மாணவ-மாணவிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். இதுதவிர இங்கு இந்த குழந்தைகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களும் பல்வேறு சிரமங்களை சந்திக்கும் நிலை இருந்து வருகிறது.

இதுகுறித்து இக்கிராம மக்கள் கூறியதாவது- சுமார் 80ஆண்டுகால பழமை வாய்ந்த இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் டாக்டர், வக்கீல் காவல்துறை அதிகாரிகள் என பல்வேறு அரசு அதிகாரிகளாக உள்ளனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த பள்ளிக்கட்டிடம் பழுதடைந்த காரணத்தினால் இடிக்கப்பட்டு இதுநாள் வரை பணிகள் தொடங்கவில்லை. தற்போது சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் எவ்வித வசதியும் இல்லாமல் இருக்கும் நூலக கட்டிடத்தில் பள்ளி இயங்கி வருகிறது. எனவே இந்த பள்ளிக்கு விரைவில் புதிய கட்டிடம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்