புது மாப்பிள்ளை வெட்டிக் கொலை; கோர்ட்டில் 2 பேர் சரண்
நாங்குநேரி அருகே, புதுமாப்பிள்ளை வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
நாங்குநேரி:
நாங்குநேரி அருகே, புதுமாப்பிள்ளை வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
புதுமாப்பிள்ளை
நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்த மஞ்சங்குளத்தை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன். இவருடைய மகன் சாமிதுரை (வயது 25). இவர் தந்தையின் விவசாய நிலத்தில் விவசாய பணிகளை மேற்கொண்டு வந்தார்.
சாமிதுரை மீது கொலை, அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து பல்வேறு அடிதடி வழக்குகளில் சிக்கியதால் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 30 நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்தார்.
இந்த நிலையில் இவருக்கு பெண் பார்த்து திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அடுத்த மாதம் சாமிதுரைக்கு திருமணம் நடைபெற இருந்ததாக கூறப்படுகிறது.
வெட்டிக்கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளியே உள்ள பஸ் நிறுத்தத்தில் சாமிதுரை படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மர்ம நபர்கள் வந்தனர். சாமிதுரையை அருகில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளனர். பின்னர் அங்கிருந்து மர்ம நபர்கள் தப்பிச்சென்று விட்டனர்.
இதுபற்றி அறிந்ததும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சாமிதுரை உடலை பார்த்து கதறி அழுதனர்.
பழிக்குப்பழியாக நடந்ததா?
சாமிதுரை கொலை குறித்து நாங்குநேரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சாமிதுரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தினார்கள். முதற்கட்ட விசாரணையில் பழிக்குப்பழியாக அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாமா? என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
2 பேர் கோர்ட்டில் சரண்
தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக விசாரித்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்திற்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், நாங்குநேரி உதவி சூப்பிரண்டு ரஜத் சதுர்வேதி ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதற்கிடையே சாமிதுரை கொலை வழக்கில் கோதைசேரியை சேர்ந்த முருகேசன் (23), திசையன்விளை நடுநந்தன்குளத்தை சேர்ந்த விக்டர் (23) ஆகியோர் ராதாபுரம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
சாமிதுரை சகோதரர் சுப்பையா என்பவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே ஊரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சாமிதுரையும் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் புதுமாப்பிள்ளை வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது