புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு பேரணி
தூத்துக்குடியில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது.
தூத்துக்குடி நகர்ப்புற ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை சார்பில் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்கத் தெரியாதவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு வழங்கிடும் நோக்கில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டம் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் உள்ள 18 மையங்களில் செயல்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தை பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தூத்துக்குடி ஜின் பேக்டரி ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி தூத்துக்குடி மாவட்ட உதவி திட்ட அலுவலர்கள் முனியசாமி மற்றும் பெர்சியால் ஞானமணி ஆகியோர் தலைமை தாங்கினர். பேரணி பாகம்பிரியாள் தெரு மற்றும் வி.இ.ரோடு வழியாக சென்றது. பேரணியில் மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பிச் சென்றனர். பேரணியில் பள்ளி தலைமை ஆசிரியர் லூடஸ் ராஜம் பிரீடா மற்றும் ஆசிரியைகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நகர்ப்புற வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) பார்வதி மற்றும் ஆசிரியப் பயிற்றுநர்கள் பால்சாமி, லியோன் சுகந்தி ஆகியோர் செய்திருந்தனர்.