நெல்லை, குமரி பகுதியில் வேலைவாய்ப்புகளை உருவாக்க முயற்சி-அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு

தமிழகத்தில் கல்வியில் சிறந்து விளங்கும் நெல்லை, குமரி பகுதியில் வேலை வாய்ப்புகளை உருவாக்க முயற்சிகள் எடுக்கப்படும் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.

Update: 2023-04-02 20:04 GMT

"தமிழகத்தில் கல்வியில் சிறந்து விளங்கும் நெல்லை, குமரி பகுதியில் வேலை வாய்ப்புகளை உருவாக்க முயற்சிகள் எடுக்கப்படும்" என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.

நூற்றாண்டு விழா

பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி நூற்றாண்டு விழா நடைபெற்றது. துணை முதல்வர் அருள் ரவி வரவேற்றார். கல்லூரி முதல்வர் மரியதாஸ் ஆண்டறிக்கை வாசித்தார்.

செயலர் புஷ்பராஜ், கலை மனைகளின் அதிபர் ஹென்றி ஜெரோம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:-

வேலை வாய்ப்பு

தென் தமிழகத்தில் கல்வி, சமூக நலன் மற்றும் பெண் கல்வி என அனைத்து சமூக முன்னேற்றத்திலும் கிறிஸ்துவ மிஷனரிகள் பெரும் பங்கு வகித்திருப்பது பாராட்டுக்குரியது. தி.மு.க. மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் உயிர் மூச்சாக சமூக நீதி உள்ளது. சமுதாயம் சமூக நீதியை அடைய கல்வியை தவிர வேறு பாதையில்லை. தமிழகத்தில் கல்வி வளர்ச்சி அதிகமாக இருக்கும் பகுதிகளாக கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்கள் திகழ்ந்து வருகிறது.

ஆனால் வேலைவாய்ப்பும், பொருளாதாரத்தில் முன்னேறிய நிலை இல்லாமல் இருக்கிறது. எனவே தென்மாவட்டத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் வளர்ச்சி திட்டப்பணிகள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 100 ஆண்டுகளாக கல்வி சேவையாற்றி மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக சேவியர் கல்லூரி திகழ்கிறது. ஆண்டுக்கு 60 சதவீதம், முதல் தலைமுறை பட்டதாரிகளை உருவாக்கி இந்த கல்லூரி சமூக நீதிக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேராசிரியர் கவுரவிப்பு

விழாவில் இந்த கல்லூரியில் படித்த முன்னாள் மாணவரும் முன்னாள் பேராசிரியரும் 102 வயதை கடந்த கே.எஸ்.நாராயணன் கவுரவப்படுத்தப்பட்டார்.

இதில் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி துணை முதல்வர் சேவியர் இன்னோசன்ட் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்