டவுன் ஆர்ச்-குறுக்குத்துறை இணைப்பு சாலைக்கு நெல்லை கண்ணன் பெயர் ; மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

நெல்லை டவுன் ஆர்ச் முதல் குறுக்குத்துறை இணைப்பு சாலைக்கு நெல்லை கண்ணன் சாலை என பெயர் சூட்டி மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2023-08-03 19:25 GMT

நெல்லை டவுன் ஆர்ச் முதல் குறுக்குத்துறை இணைப்பு சாலைக்கு நெல்லை கண்ணன் சாலை என பெயர் சூட்டி மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அவசர கூட்டம்

நெல்லை மாநகராட்சி மைய அலுவலக ராஜாஜி மண்டபத்தில் நேற்று காலையில் மாமன்ற அவசர கூட்டம் நடந்தது.

மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நெல்லை கண்ணன் பெயர்

கூட்டத்தில் மேயர் சரவணன் பேசும் போது, நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலம் நெல்லை டவுன் ஆர்ச் முதல் குறுக்குத்துறை சாலை வரையிலான இணைப்பு சாலைக்கு 'நெல்லை கண்ணன் சாலை' என்று பெயர் சூட்டி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது என்றார்.

அப்போது கவுன்சிலர்கள் பேச அனுமதி கேட்டனர். ஆனால் அதற்கு அவர் அனுமதி கொடுக்காமல் கூட்டம் நிறைவடைகிறது என்று தெரிவித்து புறப்பட்டு சென்றார்.

தீர்மானம் நிறைவேற்றம்

ஏற்கனவே கடந்த மாதம் நடந்த மாநகராட்சி கூட்டத்தில் நெல்லை கண்ணன் பெயர் சூட்டுவதற்கு சில கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அனைவரது கருத்துக்களை கேட்டு முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நகராட்சி நிர்வாக இயக்குனர் வழிகாட்டுதலின்படி நேற்று நடந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஆதரவுடன் நெல்லை கண்ணன் பெயர் சூட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் மாநகராட்சி பொறியாளர் குமரேசன், மாநகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா, மண்டல தலைவர்கள் பிரான்சிஸ் (பாளையங்கோட்டை), மகேஷ்வரி (நெல்லை) மற்றும் நிலைக்குழு உறுப்பினர்கள், கவுன்சிலர்கள், மாநகராட்சி உதவி ஆணையாளர்கள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்