நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை உடனே திறக்க வேண்டும்; தச்சை கணேசராஜா வலியுறுத்தல்

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை உடனே திறக்க வேண்டும் என அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா வலியுறுத்தினார்.

Update: 2023-06-20 19:06 GMT

நெல்லை சந்திப்பு பஸ் நிலைய கட்டுமான பணிகளை நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் நிர்வாகிகள் நேற்று பார்வையிட்டனர். பின்னர் தச்சை கணேசராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை சந்திப்பு பஸ் நிலைய பகுதி வழியாக டவுன் பஸ்கள் இயக்கப்பட்டாலும், அங்கு தார்சாலை அமைக்காததால் புழுதி பறக்கிறது. பஸ் நிலைய கட்டுமான பணிக்காக தகர ஷெட்டுகள் அமைக்கப்பட்ட இடங்களில் தார் சாலை அமைத்து, அதில் நிறுத்தங்கள் அமைத்திருக்க வேண்டும். ஆனால் அதனை தவிர்த்து ராஜா பில்டிங் பகுதிகளில் 5 நிறுத்தங்கள் அமைத்துள்ளனர்.

இதனால் அந்த பகுதியில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் அங்கு பயணிகளுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட எந்தவிதமான வசதிகளும் ஏற்படுத்தவில்லை. அங்கு போதிய வேகத்தடைகள் அமைத்து தனியார் பஸ்களை மெதுவாக செல்ல அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்.

எனவே நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தின் மீதான வழக்கை விரைந்து முடித்து அதனை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்ட சில மாதங்களிலேயே மேற்கூரை சரிந்து விழுந்து உள்ளது. அதனை கட்டிய அதே ஒப்பந்ததாரர்தான் பாளையங்கோட்டை மார்க்கெட், நேருஜி கலையரங்கம் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

எனவே அதனையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் மாநகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்திருந்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே அ.தி.மு.க. சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், முன்னாள் துணை மேயர் ஜெகநாதன் என்ற கணேசன், பகுதி செயலாளர் திருத்து சின்னத்துரை, ஒன்றிய செயலாளர் முத்துகுட்டி பாண்டியன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்