நெல்லை: தொழிலாளியை வெட்டிக்கொன்று தப்பியோடியபோது போலீசாரால் சுடப்பட்டவர் உயிரிழப்பு

தொழிலாளியை வெட்டிக்கொன்று தப்பிய வாலிபர் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். போலீஸ் ஏட்டுவையும் அவர் வெட்டியதால் இந்த அதிரடி நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர்.

Update: 2024-03-11 03:16 GMT

நெல்லை,

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே வெள்ளான்குளியில் சாலை பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அங்கு கடந்த 7-ம் தேதி அன்று, அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 2 மர்மநபர்கள் வந்தனர். குடிபோதையில் இருந்த அவர்கள் சாலையில் தங்களது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, அந்த வழியாக வந்த வாகனங்களை வழிமறித்து தகராறு செய்தனர். அந்த வழியாக வந்த அரசு பஸ்சையும் வழிமறித்தனர்.

இதையடுத்து அங்கு சாலை விரிவாக்க பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த தொழிலாளியான விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உடையநாதபுரம் பகுதியைச் சேர்ந்த செல்லப்பாண்டி மகன் கருப்பசாமி (வயது 42) மர்மநபர்களை கண்டித்து, பஸ்சுக்கு வழிவிடுமாறு கூறினார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த மர்மநபர்கள் அரிவாளால் கருப்பசாமியை சரமாரியாக வெட்டினர். இதனை தடுக்க முயன்ற மூலச்சியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரையும் அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த கருப்பசாமி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் ஏறி, முக்கூடல் ரோட்டில் தப்பி சென்றனர். இதனைப் பார்த்த சக தொழிலாளர்கள், அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து வீரவநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்கள்.

உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தப்பிய மர்மநபர்களை பிடிப்பதற்காக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, முக்கூடல் அருகே திருப்புடைமருதூரில் சென்ற அரசு பஸ்சை வழிமறித்த 2 மர்மநபர்களும், பஸ்சின் முன்பக்க கண்ணாடிகளை அரிவாளால் உடைத்தனர். சிறிதுநேரத்தில் அந்த வழியாக வந்த போலீசார், மர்மநபர்களை மடக்கி பிடிக்க முயன்றனர். அப்போது போலீஸ் ஏட்டு செந்தில்குமாரை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டி விட்டு, அருகில் இருந்த வாழைத்தோட்டத்துக்குள் தப்பி ஓடினர்.

உடனே போலீசார் அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் மர்மநபர்களில் ஒருவரது வலது காலில் குண்டு பாய்ந்தது. மற்றொருவரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள், முக்கூடல் அருகே தென்திருப்புவனத்தைச் சேர்ந்த காளி மகன் பேச்சிதுரை (23), கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் சந்துரு (23) என்பது தெரியவந்தது.

அரிவாள் வெட்டில் காயமடைந்த போலீஸ் ஏட்டு செந்தில்குமார் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். துப்பாக்கி சூட்டில் காயமடைந்த பேச்சிதுரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோடியபோது துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பேச்சிதுரை சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார். 

பேச்சித்துரை உயிரிழப்பை தொடர்ந்து, நெல்லையில் வீரவநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்