பூந்தமல்லி அருகே கார் மோதி நேரு சிலை சேதம்

பூந்தமல்லி அருகே கார் மோதி நேரு சிலை உடைந்து சேதமானது.

Update: 2022-12-29 12:48 GMT

பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை சிக்னல் அருகே காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமர் நேரு சிலை அமைக்கப்பட்டிருந்தது. இதனை கடந்த 1988-ம் ஆண்டு ராஜூவ்காந்தி திறந்து வைத்திருந்தார்.

தற்போது பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தப்பட்டு வருவதையொட்டி பீடத்துடன் இருந்த சிலையை வேறு இடத்தில் மாற்றி வைக்குமாறு அதிகாரிகள் காங்கிரஸ் கட்சியினரை கேட்டிருந்தனர் இதற்காக சிலையை வைக்க வேறு இடத்தை கட்சியினர் பார்த்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை சென்னையிலிருந்து நசரத்போட்டை வழியாக ஸ்ரீபெரும்புதூர் நோக்கி வேகமாக வந்த கார் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த நேரு சிலை பீடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பீடம் மற்றும் சிலை உடைந்து சேதமானது. காரின் முன்பக்க கண்ணாடியும் உடைந்தது. இதில் காரை ஓட்டி வந்த திருவண்ணாமலையை சேர்ந்த டிரைவர் ஏழுமலை (வயது 38) படுகாயமடைந்தார். பொதுமக்கள் அவரை மீட்டு பூந்தமல்லி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் அங்கு திரண்டு திட்டமிட்டே சிலையை உடைத்ததாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்துக்கு வந்த நசரத்பேட்டை போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை சமாதானப்படுத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்