கூலி உயர்வு குறித்த பேச்சுவார்த்தை தோல்வி

கூலி உயர்வு குறித்த விசைத்தறி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

Update: 2022-05-29 19:25 GMT

ராஜபாளையம்,

கூலி உயர்வு குறித்த விசைத்தறி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

மருத்துவ துணி உற்பத்தி

ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி, சங்கரபாண்டியபுரம், சமுசிகாபுரம், அய்யனாபுரம் ஆகிய பகுதிகளில் மருத்துவ துணி உற்பத்தி செய்யும் விசைத்தறி தொழிலாளர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். நூற்றுக்கணக்கான சிறு விசைத்தறி உரிமையாளர்கள் உள்ளனர்.

இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு தொடர்பாக ஒப்பந்தம் முடிவு செய்யப்படும். சிறு, குறு விசைத்தறி உரிமையாளர்களுக்கான கூலி, உற்பத்தி செய்யப்படும் துணியின் மீட்டர் கணக்கிலும், தொழிலாளர்களுக்கான கூலி தறியில் இணைக்கப்பட்டுள்ள பாய்ண்ட் மீட்டர் எந்திரத்தின் அளவை மதிப்பிட்டும் நிர்ணயிக்கப்படும்.

கூலி உயர்வு

தொழிலாளர்களுக்கு 6 பைசா கூலி உயர்வு செய்யப்பட்டு இந்த ஆண்டு ரூ.116.53-ம், அடுத்த ஆண்டு 4 பைசா உயர்வு செய்யப்பட்டு ரூ.122.77-ம், 3-ம் ஆண்டு 4 பைசா உயர்வு செய்யப்பட்டு ரூ.129.01-ம் வழங்க உற்பத்தியாளர்கள் ஒப்புதல் அளித்தனர்.

தொழிலாளர்களுக்கு உயர்வு செய்யப்பட்டுள்ள விகிதாச்சாரத்தில் இருந்து சிறு, குறு விசைத்தறி உரிமையாளர்களுக்கு இரு மடங்கு உயர்த்தி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொள்ளாத சிறு விசைத்தறி உரிமையாளர்கள் 3 மடங்கு கூலி உயர்வு வேண்டும் என கோரி வந்தனர்.

இந்த உயர்வுக்கு உற்பத்தியாளர்கள் மறுப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் முன்னிலையில் ராஜபாளையம் தாலுகா அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடந்தது.

பேச்சுவார்த்தை

வட்டாட்சியர் சீனிவாசன் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தையில் போலீசார் மற்றும் மருத்துவ துணி உற்பத்தியாளர்கள், சிறு, குறு விசைத்தறி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

இரு மடங்கு கூலி உயர்வை சிறு விசைத்தறி உரிமையாளர்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையில் 3 மடங்கு கூலி உயர்வுக்கு உற்பத்தியாளர்கள் மறுத்து விட்டனர். எனவே 2 மணி நேரம் நடந்த கூட்டம் எந்த முடிவும் எடுக்கப்படாததால் தோல்வியில் முடிந்தது.

இதுகுறித்து அடுத்த கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடக்கும் என வட்டாட்சியர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்