என்.எல்.சி- ஒப்பந்த தொழிலாளர்கள் இடையேயான பேச்சுவார்த்தை தோல்வி
என்.எல்.சி -ஒப்பந்த தொழிலாளர்கள் இடையேயான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.;
என்.எல்.சி. நிறுவனத்தின் ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் அல்லது பணி நிரந்தரம் செய்யும் வரை மாதம் ரூ.50 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜூலை 26-ந் தேதி முதல் வேலைநிறுத்தத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில், ஜீவா ஒப்பந்த தொழிற்சங்க நிர்வாகிகள், மத்திய தொழிலாளர் ஆணைய சென்னை மண்டல ஆணையர் நரசய்யா, என்.எல்.சி. நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அதே நேரத்தில், மொத்தம் உள்ள 6 ஆயிரத்து 480 ஒப்பந்த தொழிலாளர்களில் 517 பேரை கோர்ட்டு உத்தரவின்படி பணிநிரந்தரம் செய்வதாக என்.எல்.சி. நிர்வாகம் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் வருகிற 7-ந் தேதிக்குள் தெரிவிக்குமாறு ஒப்பந்த ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும், ஜீவா தொழிற்சங்கத்தினரின் போராட்டம் தொடரும் என்றும் முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாகவும் ஜீவா தொழிற்சங்க சிறப்பு செயலாளர் சேகர் தெரிவித்துள்ளார்.