உத்தரவுகளை நிறைவேற்றுவதில் அலட்சியம் காட்டுகிறார்கள்:ஐ.ஏ.எஸ். அதிகாரியை சிறைக்கு அனுப்புவதுதான் சரியாக இருக்கும்- மதுரை ஐகோர்ட்டு கடும் கண்டனம்

கோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவுகளை செயல்படுத்துவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், எனவே ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியையாவது சிறைக்கு அனுப்புவதுதான் சரியாக இருக்கும் என்றும் மதுரை ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது.

Update: 2023-07-19 20:33 GMT


கோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவுகளை செயல்படுத்துவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், எனவே ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியையாவது சிறைக்கு அனுப்புவதுதான் சரியாக இருக்கும் என்றும் மதுரை ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது.

அவமதிப்பு வழக்கு

நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம். இவர் கல்வித்துறை சார்ந்து மதுரை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அதில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

ஆனால் அந்த உத்தரவை கல்வித்துறை அதிகாரிகள் முறையாக செயல்படுத்தவில்லை. இதையடுத்து அவர்கள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஞானப்பிரகாசம், கடந்த 2020-ம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, இது சம்பந்தமாக அப்போதைய கல்வித்துறை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் (தற்போது இவர் நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரியாக உள்ளார்) மற்றும் அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.

அதிகாரிகள் ஆஜர்

இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் யாதவ் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் ஆஜரானார்கள்.

அவர்களிடம் நீதிபதி, மனுதாரர் வழக்கில் கோர்ட்டின் உத்தரவை செயல்படுத்துவதற்கு பலமுறை வாய்ப்பளித்தும் அதை நிறைவேற்றாதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

பின்னர் நீதிபதி கூறுகையில், ஒரு வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பின்பு எது சரி? எது தவறு? என்று தீவிர ஆலோசனை செய்த பின்னர்தான் ஐகோர்ட்டு ஒவ்வொரு வழக்கிலும் உத்தரவுகளை பிறப்பிக்கிறது. ஆனால் அந்த உத்தரவுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக செயல்படுத்துவது இல்லை. கோர்ட்டு உத்தரவை அலட்சியப்படுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர் என்று அதிருப்தி தெரிவித்தார்.

கடும் கண்டனம்

மேலும், இது போன்ற அவமதிப்பு வழக்கின் அடிப்படையில் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியையாவது சிறைக்கு அனுப்புவதுதான் சரியாக இருக்கும். மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெற்றுக் கொண்டு, அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபடுவதை ஏற்க இயலாது என்று கடும் கண்டனமும் தெரிவித்தார்.

இந்த வழக்கில் ஆஜராவதில் இருந்து அதிகாரிகளுக்கு விலக்கு அளிக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதி, அடுத்தக்கட்ட விசாரணையை வருகிற 24-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்