அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மாா்ச் 25-ம் தேதி முதல் நீட் பயிற்சி

மாா்ச் 25-ந் தேதி முதல் மே 2-ந் தேதி வரை தொடா் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

Update: 2024-03-07 16:47 GMT

சென்னை,

பள்ளிக் கல்வி இயக்குநா் க.அறிவொளி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு மாணவா்களுக்கு நீட், ஜேஇஇ தோ்வுகளுக்கு கடந்த நவம்பா் முதல் பிப்ரவரி வரை பள்ளி அளவில் பயிற்சி வழங்கப்பட்டது. அதன் தொடா்ச்சியாக, பொதுத்தோ்வு முடிந்த பிறகு 12-ம் வகுப்பு மாணவா்களுக்கு கல்விமாவட்ட அளவில் மாா்ச் 25-ந் தேதி முதல் மே 2-ந் தேதி வரை தொடா் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, ஒரு கல்வி மாவட்டத்துக்கு அதிகபட்சம் 2 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட வேண்டும். ஒரு மையத்துக்கு 40 போ் வீதம் மாணவா்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப மையங்கள் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளலாம். இணையதளம் மற்றும் ஸ்மாா்ட் வகுப்பறை வசதி கொண்ட பள்ளிகளை மையங்களாகத் தோ்வுசெய்ய வேண்டும். தமிழ், ஆங்கில வழியில் பயிற்சி நடைபெறும். தினந்தோறும் தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல் ஆகிய 4 பாடங்களிலும் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

இதுதவிர பயிற்சி மையங்கள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9.15 முதல் மாலை 4.30 மணி வரை வழங்கப்படும். பயிற்சியின் போது மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு, போக்குவரத்து கட்டணம் வழங்கப்படும்.வாரந்தோறும் சனிக் கிழமை திருப்புதல் தோ்வுகள் நடத்தப்பட்டு அதுகுறித்த விவாதங்கள் மேற்கொள்ளப்படும். அதற்குரிய கால அட்டவணைகளும் வழங்கப்பட்டுள்ளன. இத்தகைய வழிமுறைகளை பின்பற்றி பயிற்சி மையங்கள் சிறப்பாக செயல்பட தேவையான நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்