அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி
விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடந்து வருகிறது.
விழுப்புரம்:
கொரோனா நோய்த்தொற்று பாதிப்பால் கடந்த 2 ஆண்டுகளாக இணையவழியாக நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது கொரோனா பெருந்தொற்று குறைந்து மக்கள், இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.
இதன் அடிப்படையில் இந்த ஆண்டில் நீட் தேர்வுக்கு நேரடியாக பயிற்சியளிக்க அரசு முடிவு செய்தது. அதன்படி தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு கடந்த மாதம் 26-ந் தேதி முதல் தொடங்கி வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்து வருகிறது.
14 மையங்களில்...
விழுப்புரம் மாவட்டத்தில் கோலியனூர், காணை, கண்டமங்கலம், விக்கிரவாண்டி, முகையூர், திருவெண்ணெய்நல்லூர், செஞ்சி, வல்லம், மயிலம், ஒலக்கூர், மரக்காணம், வானூர், மேல்மலையனூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 14 வட்டாரங்களில் தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில் மாணவ- மாணவிகளுக்கு காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
10-ம் வகுப்பில் 60 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெற்றவர்களும், பிளஸ்-1 வகுப்பில் 60 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களும் விருப்பத்தின் அடிப்படையில் இப்பயிற்சியில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். இப்பயிற்சியில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய 4 பாடங்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு பாடத்திற்கும் 1½ மணி நேரம் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. தற்போது இப்பயிற்சி வகுப்பில் 1,608 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.
அரசு சார்பில் 70 மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கலாம் என்று அறிவித்திருந்தாலும். ஒவ்வொரு மையத்திலும் கூடுதலான எண்ணிக்கையில் மாணவ- மாணவிகள் பயிற்சி வகுப்பில் சேர்ந்துள்ளதால் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக பயிற்சி மையங்களை ஏற்படுத்தலாம் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.