அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி தொடக்கம்

நீலகிரி மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி தொடங்கியுள்ளது.

Update: 2022-11-26 18:45 GMT

கூடலூர்

நீலகிரி மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி தொடங்கியுள்ளது.

நுழைவுத்தேர்வு

மருத்துவ படிப்பில் சேருவதற்கு நீட் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பள்ளி இறுதி வகுப்பில் படிக்கும் மாணவர்கள் நுழைவுத்தேர்வு எழுதுவதற்காக ஆயத்தமாகி வருகின்றனர். மேலும் அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்காக கடந்த 2017-ம் ஆண்டு அரசு பள்ளிக்கூடங்களில் சிறப்பு பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு நடத்தியது. இதில் கிராமப்புற மாணவர்கள் பெரும்பான்மையாக கலந்து கொண்டு பயிற்சி பெற்று நீட் தேர்வுகளில் வெற்றி பெற்றனர்.

இதற்கிடையில் கொரோனா காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் நேரடி வகுப்புகள் நடத்தப்படவில்லை. தொடர்ந்து ஆன்லைன் மூலமாக நீட் பயிற்சி அளிக்கப்பட்டது. அதன்பின்னர் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பியது. இருப்பினும் கடந்த ஆண்டு நீட் பயிற்சி வகுப்புகள் நடைபெறவில்லை.

நீட் பயிற்சி வகுப்பு

இந்த நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் நீட் பயிற்சி வகுப்புகள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் நேற்று பயிற்சி வகுப்புகள் 3 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கியது. கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியரும், மைய ஒருங்கிணைப்பாளருமான அய்யப்பன் பயிற்சியை தொடங்கி வைத்தார்.

நீட் பயிற்சி மைய மாவட்ட தொடர்பு அலுவலர் சங்கர், ஒருங்கிணைப்பாளர்கள் கவிதா, வினோத் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு நீட் தேர்வு குறித்த பாடங்களை விளக்கி பேசினர். இதில் சுமார் 350 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் மாவட்டத்தில் உள்ள ஊட்டி, மஞ்சூர், கோத்தகிரி, பந்தலூர், குன்னூர் உள்ளிட்ட இடங்களில் பயிற்சி வகுப்புகள் தொடங்கி நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்