மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவர்கள் 165 பேர் தேர்ச்சி

நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் 165 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து உள்ளனர்.

Update: 2022-09-10 19:23 GMT

நீட் தேர்வு முடிவுகள்

இந்தியா முழுவதும் இளநிலை மருத்துவப்படிப்பில் (எம்.பி.பி.எஸ்.) சேருவதற்கு நீட் என்கிற அகில இந்திய நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு கடந்த ஜூலை மாதம் 17-ந் தேதி நாடு முழுவதும் நீட் நுழைவுத்தேர்வு நடந்தது.

நாமக்கல் மாவட்டத்தில் 7 மையங்களில் நடந்த தேர்வில் 4,871 தேர்வர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கான தேர்வு முடிவு சமீபத்தில் வெளியிடப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் அரசுப்பள்ளிகள் 88, ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி ஒன்று, பழங்குடியினர் நலத்துறை பள்ளி 5 என மொத்தம் 94 பள்ளிகளை சேர்ந்த 589 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதினர்.

அவர்களில் 165 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். அதில் திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் நாகேஷ்வரன் 720-க்கு 373 மதிப்பெண்களும், நாமக்கல் நல்லிபாளையம் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் சரண் 280 மதிப்பெண்களும், வேலகவுண்டம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் சரண் விஷ்வா 260 மதிப்பெண்களும், வளையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் விஜய் 228 மதிப்பெண்களும், திம்மநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் அஜித்குமார் 221 மதிப்பெண்களும் பெற்று முதல் 5 இடங்களை பிடித்தனர்.

165 பேர் தேர்ச்சி

நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளை பொறுத்த வரையில் 300 மதிப்பெண்ணுக்கு மேல் ஒருவர், 200 மதிப்பெண்களுக்கு மேல் 10 பேர், 101 முதல் 200 மதிப்பெண்கள் வரை 128 பேர், 93 முதல் 100 மதிப்பெண்கள் வரை 26 பேர் பெற்று உள்ளனர். 424 பேர் 92 மதிப்பெண்களுக்கு கீழ் பெற்று தோல்வி அடைந்து உள்ளனர். தேர்வு எழுதிய 589 பேரில் 165 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இவர்களில் அரசின் 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டில், 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு தேர்வாக வாய்ப்பு உள்ளது.

கடந்த ஆண்டு 530 பேர் தேர்வு எழுதியதில், 51 பேர் தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வுக்காக பயிற்சி அளித்த ஆசிரியர்களை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்