தனியார் பயிற்சிக்கு இணையாக அரசு 'நீட்' தேர்வு பயிற்சி இருக்கிறதா?-ஆசிரியர்கள், மாணவிகள் கருத்து
நீட் தேர்வு என்பது பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்துறைகளில் இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்காக, இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு முறையாகும்.
தேசியத் தேர்வு முகமை இதை நாடு முழுவதும் நடத்துகிறது. அனைத்து அரசுக் கல்லூரிகளுக்கும் தனியார் கல்லூரிகளுக்கும் பொருந்தும் வகையில் இத்தேர்வு நடத்தப்படுகிறது.
720 மதிப்பெண்கள்
இத்தேர்வில் இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் ஆகிய பாடங்களில் ஒவ்வொன்றில் இருந்தும் 45 வினாக்கள் கேட்கபடும். மொத்தம் 180 வினாக்கள் இடம் பெறும். ஒரு வினாவிற்கான சரியான விடைக்கு 4 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில், மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. ஒரு கேள்விக்கு சரியான பதிலளித்தால் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான பதில் அளிக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படுகிறது.
இந்த தேர்வு தமிழ், ஆங்கிலம், அசாமி, பெங்காலி, குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, தெலுங்கு, பஞ்சாபி மற்றும் உருது ஆகிய 13 மொழிகளில் நடத்தப்படுகிறது.
இதுதொடர்பான தகவல்களை வலைத்தளம் www.ntaneet.nic.in என்ற இணையத்தள முகவரியிலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அரசு பள்ளி மாணவர்கள்
அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்படி ஆண்டு தோறும் 400-க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு மூலம் மருத்துவக் கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.
தமிழக அரசு 412 பள்ளிகளில் நீட் தேர்வு மையங்களை நடத்தி வருகிறது. இந்த மையங்கள் தனியாருக்கு நிகராக இருக்கிறதா? மாணவர்கள் ஆர்வமாக சென்று படிக்கிறார்களா? என்பது குறித்து மாணவர்கள், பெற்றோர்கள், சங்க நிர்வாகிகள் பல்வேறு கருத்துகளை கூறுகின்றனர். அத்துடன், அரசு பள்ளி மாணவர்கள் நலன் கருதி, கூடுதலாக நீட் தேர்வு மையங்களை தனியாருக்கு நிகராக அரசு தொடங்க வேண்டும் என்றும் மாணவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
வரவேற்கக்தக்கது
வேலகவுண்டம்பட்டியை சேர்ந்த மருத்துவ மாணவி லோகேஸ்வரி:-
நான் வேலகவுண்டம்பட்டி அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்தேன். நீட் தேர்வு எழுதி 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கிராமத்தில் இருந்து வந்து தற்போது திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பயின்று வருகிறேன்.
நான் எனது பள்ளி ஆசிரியர்கள் கொடுத்த ஆலோசனைப்படி நீட் தேர்வை எதிர்கொண்டேன். பயிற்சி மையத்திற்கு போகவில்லை. இருப்பினும் நீட் தேர்வில் 240 மதிப்பெண்கள் பெற்று மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறேன். அனைத்து மாணவர்களுக்கும் மருத்துவக் கல்வி என்பது கையில் எட்டும் தூரத்தில் தான் இருக்கிறது. இதனை பயன்படுத்தி அனைத்து மாணவர்களும் மருத்துவம் படிக்க முன்வர வேண்டும். தமிழக அரசு நீட் தேர்வு பயிற்சி மையங்களை நடத்தி வருவது மிகவும் வரவேற்கத்தக்கது.
கனவை நனவாக்க முடிகிறது
நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படித்து வரும் புவனேஸ்வரி:-
12-ம் வகுப்பில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்கள் கூட நீட் தேர்வின் மூலம் தங்களின் மருத்துவ கனவை நனவாக்க முடிகிறது. நீட் தேர்வின் மூலம் மருத்துவ படிப்புகள் தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு சமவாய்ப்பு அடிப்படையில் இடம் கிடைக்கிறது. தனியார் பயிற்சி மையத்திற்கு இணையாக அரசு பயிற்சி மையத்திலும் பயிற்சி அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாட திட்டத்தில் மாற்றம்
மோகனூரை சேர்ந்த கல்வியாளர் பழனியாண்டி:-
நீட் தேர்வு வேண்டாம் என்பது தமிழக அரசின் நிலைபாடாக இருந்தாலும், நீட் தேர்வு அமலில் இருப்பதால் கிராம அளவில் மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்துவதற்கு போதிய பயிற்சி நிலையங்களை அரசு அதிக எண்ணிக்கையில் திறக்க வேண்டும். அதேபோல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வில் கேள்விகள் கேட்கப்படுவதால், நம்முடைய பாட திட்டத்திலும் சில மாற்றங்களை கொண்டு வந்து மாணவர்களின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது போல், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும். அதேபோல் பயிற்சி மையங்கள் வெகு தொலைவில் இருப்பதால் அரசு பள்ளி மாணவர்களால் நீண்ட தூரம் சென்று படிக்க முடிவதில்லை. எனவே அருகிலேயே கூடுதல் பயிற்சி மையத்தை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிராமப்புற மாணவர்கள் பாதிப்பு
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொருளாளர் மலர்க்கண்ணன்:-
எங்களை பொறுத்த வரையில் தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை. நீட் தேர்வில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் அதிக அளவில் கேள்விகள் கேட்கப்படுவதால் கிராமப்புற மாணவர்கள் இதில் வெற்றி பெறுவது கேள்விக்குறியாக இருந்து வருகிறது. இருந்தாலும் நீட் தேர்வு முறை கொண்டு வரப்பட்டு உள்ளதால், தமிழக மாணவர்கள் நலன் பயக்கும் வகையில் கூடுதலான நீட் தேர்வு மையங்களை அரசு அமைக்க வேண்டும். அவையும் தனியார் பயிற்சி மையத்திற்கு நிகராக இருக்க வேண்டும்.
தமிழகத்தில் மருத்துவ கல்விக்கு தேவையான கல்வி முறை பிளஸ்-2 வரை தரமாக மாணவர்களுக்கு கற்றுத்தரப்படுகிறது. ஆனால் வடமாநிலங்களை பொறுத்த வரையில், பள்ளி கூடங்களில் கல்வியின் தரம் குறைவாக இருக்கிறது. ஆனால் நம்மைவிட அதிகமான எண்ணிக்கையில் அங்கே தனியார் பயிற்சி நிலையங்கள் உள்ளன. ஏழை மாணவர்களால் வசதி படைத்த மாணவர்களை போன்று லட்சக்கணக்கில் பணத்தை செலவிட்டு தனியார் பயிற்சி நிலையங்களில் சென்று பயிற்சி பெற முடியாது. எனவே தமிழகத்தில் ஒரு ஒன்றியத்திற்கு ஒரு நீட் தேர்வு பயிற்சி மையத்தை அரசு அமைக்க வேண்டும்.
50 மாணவர்களுக்கு ஒரு மையம்
நாமக்கல்லை சேர்ந்த கல்வியாளர் பிரணவ்குமார்:-
மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பள்ளிக்கும், தேவையான மையங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். ஒரு மையத்திற்கு 50 மாணவர்கள் என்ற வீதத்தில் மட்டுமே இருக்க வேண்டும். தனியார் பயிற்சி மையங்களுக்கு நிகராக கற்றல், கற்பித்தல் வசதிகளை மேம்படுத்த வேண்டும். குறிப்பாக கிராமபுற மாணவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிந்த பின்பு நீட் தேர்வு தொடங்கும் வரை முழு நேர வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். இதற்காக தனியாக முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். பள்ளி தலைமை ஆசிரியர், மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் இணைந்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்து மையங்களிலும் நிபுணர்கள் கொண்டு பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.