விருத்தாசலம் அருகே செம்பளாக்குறிச்சி ரெயில்வே சுரங்கப்பாதையில் புகுந்த மழைநீர் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் கிராம மக்கள் அவதி
விருத்தாசலம் அருகே செம்பளாக்குறிச்சி ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் புகுந்தது. இதன் காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் கிராம மக்கள் அவதியடைந்தனா்.
விருத்தாசலம்,
விருத்தாசலத்தில் சென்னை -திருச்சி ரெயில்வே வழித்தடத்தில் செம்பளாக்குறிச்சி, கவணை, சித்தேரிக்குப்பம், கோபுராபுரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுரங்க பாதை அமைக்கப்பட்டது. மழைக்காலங்களில் உளுந்தூர்பேட்டை, மங்கலம்பேட்டை, பூவனூர், பவழங்குடி, மாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழைநீர் அப்பகுதியில் உள்ள வாய்க்கால்கள் வழியாக ஓடி வந்து செம்பளாக்குறிச்சி சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்படும். இதனால் மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் சுரங்கப்பாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். இதன் காரணமாக மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் தண்டவாளத்தை நடைபாதையாக பயன்படுத்துவார்கள். அவ்வாறு செல்லும் போது, அந்த வழியாக செல்லும் ரெயில்களில் அடிபட்டு உயிரிழக்கும் சம்பவங்களும் நிகழ்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் சுரங்கப் பாதையில் தண்ணீர் புகுந்தது. இதனால் சுரங்கப்பாதையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதியடைந்துள்ளனர். ரெயில்வே நிர்வாகம் உடனடியாக இந்த சுரங்கத்தில் தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்ற வேண்டும். இந்த சுரங்கத்தில் மழை நீர் தேங்காத வண்ணம் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் விருத்தாசலம் தாசில்தார் தனபதி, இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் வருவாய் துறையினர் போலீசார் இந்த சுரங்கத்தை பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் அதில் தேங்கி இருக்கும் தண்ணீரை வெளியேற்ற தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.