விளாத்திகுளம் அருகே காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

விளாத்திகுளம் அருகே காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

Update: 2023-09-28 18:45 GMT

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே உள்ள கமலாபுரத்தில் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தியும், இப்பிரச்சினையை கண்டுகொள்ளாத அதிகாரிகளை கண்டித்தும் காலி குடங்களுடன் நேற்று பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண்கள் சாலைமறியல்

விளாத்திகுளம் அருகே உள்ள கமலாபுரம் கிராமத்தில், கடந்த சில வாரங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் கிராம மக்கள் குடிநீரை அதிக விலை கொடுத்து தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து கிராம மக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடமும், வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் பல முறை முறையிட்டும் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கமலாபுரம் கிராம ெபண்கள் விளாத்திகுளம்-கோவில்பட்டி சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து தடைபட்டது. இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் விளாத்திகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தை

அப்போது பெண்கள் கூறுகையில், ஒரு குடம் குடிநீர் ரூ.12 விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகிறோம். குடிநீர் பிரச்சினை குறித்து அதிகாரிகளிடம் தொடர்ந்து முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை' என புகார் ெதரிவித்தனர். இதற்கு, மிலாது நபி காரணமாக அரசு அலுவலகங்கள் விடுமுறை. எனவே, நாளை(இன்று) சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படும்' என்று போலீசார் உறுதி அளித்தனர். இதை ஏற்றுக் கொண்ட பெண்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் சிறிது நேரம் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்