வல்லநாடு அருகே டிப்பர் லாரி மோதியதில் மக்கள்நல பணியாளர் சாவு

வல்லநாடு அருகே டிப்பர் லாரி மோதியதில் மக்கள்நல பணியாளர் பரிதாபமாக இறந்து போனார்.

Update: 2023-07-31 18:45 GMT

ஸ்ரீவைகுண்டம்:

வல்லநாடு அருகே டிப்பர் லாரி மோதியதில் சாலைஓரம் நடந்து சென்ற மக்கள் நல பணியாளர் பலியானார்.

மக்கள்நல பணியாளர்

வல்லநாடு அருகே உள்ள நட்டார்குளம் வடக்கு தெருவை சேர்ந்த ராமசாமி மகன் ராமசுப்பு (வயது 56). இவர் நட்டார்குளம் கிராமத்தில் மக்கள் நல பணியாளராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் நேற்று காலையில் அவரது மகன் காசி மணியுடன் நட்டார்குளத்தில் இருந்து வல்லநாட்டிற்கு சென்றார். பின்னர் வல்லநாட்டில் இருந்து மீண்டும் இருவரும் நட்டார்குளத்திற்கு சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது பாறைக்காடு அருகே சாலைஓரத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வேகமாக வந்த டிப்பர் லாரி ஒன்று எதிர்பாராத விதமாக ராமசுப்பு மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை, மகன் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

தகவல் அறிந்த முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லைராஜன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். தொடர்ந்து ராமசுப்புவின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்