உத்தமபாளையம் அருகேஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி:கடன் தொல்லையால் விபரீதம்

உத்தமபாளையம் அருகே கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலைக்கு முயன்றனர். அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2023-06-02 18:45 GMT

கடன் தொல்லை

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள க.புதுப்பட்டி-ஊத்துக்காடு சாலையில் எஸ்.டி.கே நகரில் வசிப்பவர் பிச்சைமணி (வயது 43). ஜீப் டிரைவர். இவரது மனைவி கலைவாணி (34). ஏலக்காய் தோட்ட தொழிலாளி. இந்த தம்பதிக்கு விமலா (16), விகாஷினி (14) என்ற 2 மகள்கள் உள்ளனர். இதில் விமலா அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பும், விகாஷினி 7-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

பிச்சைமணி குடும்ப செலவுக்காக அதே பகுதியை சேர்ந்த சிலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் வேலை சரிவர இல்லாததால் அவர் கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வந்தார். இதனால் கடன் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டு தொல்லை செய்தனர். மேலும் அவர்கள் கடனை திருப்பி கேட்டு மிரட்டியதுடன், ஆபாசமாக பேசியதாக தெரிகிறது.

தற்கொலை முயற்சி

இதனால் விரக்தியடைந்த அவர் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டார். இதன் காரணமாக தான் இருப்பதை விட சாவதே மேல் என அவர் எண்ணினார். அப்போது தான் இறந்து விட்டால் தனது மனைவி, குழந்தைகள் அனாதைகளாகிவிடுவார்கள் என அவருக்கு தோன்றியது. இதனால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள அவர் முடிவு செய்தார்.

இதற்காக நேற்று மாலை அவர் கடையில் இருந்து எலி மருந்தை (விஷம்) வாங்கி வந்தார். பின்னர் வீட்டிற்கு வந்த அவர் கதவை பூட்டிக்கொண்டு அந்த மருந்தை குளிர்பானத்தில் கலந்து குழந்தைகளுக்கு தெரியாமல் அவர்களிடம் குடிக்க கொடுத்தார். அதன்பின்னர் கணவன்-மனைவி இருவரும் குடித்தனர்.

தீவிர சிகிச்சை

இதற்கிடையே பிச்சைமணி குடும்பத்தினரும், பக்கத்து வீட்டை சேர்ந்தவர்களும் அங்குள்ள திண்ணையில் அமர்ந்து தினந்தோறும் பேசுவது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு பிச்சைமணி வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் கதவு உள்புறமாக பூட்டி இருந்தது.

இதையடுத்து அவர்கள் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பிச்சைமணி, அவரது மனைவி மற்றும் குழந்தைகள் 2 பேரும் மயங்கி கிடந்தனர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் 4 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு 4 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்