டி.என்.பாளையம் அருகே பலத்த சூறைக்காற்று; 10 ஆயிரம் வாழைகள் முறிந்தன
டி.என்.பாளையம் அருகே பலத்த சூறைக்காற்றில் 10 ஆயிரம் வாழைகள் முறிந்தன.
டி.என்.பாளையம்
டி.என்.பாளையம் அருகே பலத்த சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 10 ஆயிரம் வாழைகள் முறிந்தன. அதற்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாழைகள் முறிந்தன
டி.என்.பாளையம் அருகே உள்ள கொண்டையம்பாளையம் மற்றும் புஞ்சை துறையம்பாளையம் பகுதியில் ஏராளமான விவசாயிகள் வாழை பயிரிட்டு உள்னர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கொண்டையம்பாளையம், துறையம்பாளையம் பகுதியில் ஒரு மணி நேரம் நிற்காமல் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.
சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் கொண்டையம்பாளையம் அருகே உள்ள ஊஞ்சமரத்துதோட்டத்தை சேர்ந்த லோகநாதன் என்பவர் தோட்டத்தில் 500 வாழைகள் முறிந்தன. சஞ்சீவ்காட்டுத் தோட்டம் பகுதியில் பகவதியண்ணன் என்பவருடைய தோட்டத்தில் 1,000 வாழைகள், கொண்டையம்பாளையத்தில் நடராஜ் என்பவருடைய தோட்டத்தில் 1,200 வாழைகள் அடியோடு முறிந்து விழுந்தன. இதேபோல் பல இடங்களில் உள்ள தோட்டங்களில் சுமார் 10 ஆயிரம் வாழைகள் முறிந்துவிட்டன. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
விவசாயிகள் கோரிக்கை
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறும்போது, 'வாழைகள் குலை தள்ளி வளர்ந்து வந்த நிலையில் சூறைக்காற்றால் அடியோடு முறிந்து விட்டன. இதனால் ஒவ்வொரு விவசாயிக்கும் குறைந்தது ரூ.50 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.3 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வேளாண்மை துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் வாழைகள் முறிந்து கிடக்கும் தோட்டங்களை நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்து, சேதமதிப்பை கணக்கிட்டு இழப்பீடு வழங்க வேண்டும்' என்று தெரிவித்தனர்.