திருமங்கலம் அருகே கோழிக்கறி சாப்பிட்ட தந்தை-மகள் சாவு?- போலீசார் விசாரணை

திருமங்கலம் அருகே கோழிக்கறி சாப்பிட்ட தந்தை-மகள் இறந்தார்களா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2023-10-17 20:14 GMT

திருமங்கலம், 

கோழிக்கறி சாப்பிட்டனர்

கரூர் மாவட்டம் லாலாபேட்டையை சேர்ந்தவர் கவுதம் ஆனந்த் (வயது 33). இவருடைய மனைவி பவித்ரா. இவர் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பெரியபொக்கம்பட்டியை சேர்ந்தவர். இவர்களுடைய 4 வயது மகள் மிதுஸ்ரீ. கவுதம் ஆனந்த் கரூர் மாவட்டத்தில் கோழி பண்ணையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சொந்தமாக தொழில் தொடங்க நினைத்த கவுதம் ஆனந்த் தனது மனைவியின் கிராமமான பெரியபொக்கம்பட்டியில் கோழிப்பண்ணை அமைத்தார். அந்த பகுதியிலேயே வீடு கட்டி குடியிருந்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி மற்றும் மகள் ஆகிய 3 பேரும் கடையில் கோழிக்கறி வாங்கி வந்து சமைத்து சாப்பிட்டனர். சிறிதுநேரத்தில் சிறுமி மிதுஸ்ரீக்கு வயிற்று வலி ஏற்பட்டது. அவள் சற்று நேரத்தில் மயக்கம் அடைத்தாள். சிறுமியை உடனடியாக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

தந்தை-மகள் சாவு

இந்தநிலையில் ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் கவுதம் ஆனந்திற்கும் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதற்கிடையில் நேற்று அதிகாலை மிதுஸ்ரீ சிகிச்சை பலனின்றி இறந்தாள். மகள் இறந்ததை அறிந்து கவுதம் ஆனந்த் அதிர்ச்சி அடைந்தார். திடீரென அவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

விசாரணை

இதுகுறித்து பவித்ரா சிந்துபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோழிக்கறி கெட்டுப்போய் இருந்ததாகவும், அதை சமைத்து சாப்பிட்டதால் இருவரும் உயிரிழந்ததாகவும் தகவல்கள் பரவின. ஆனால், சாவுக்கு அதுதான் உண்மையான காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என போலீசாரிடம் கேட்டபோது, பிரேத பரிசோதனைக்கு பின்னரே இருவரின் இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும் என கூறினர். சிறுமியும், தந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரிய பொக்கம்பட்டி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்