தேனி அருகேஓடும் காரில் பயங்கர தீ:ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிர் தப்பினர்
தேனி அருகே ஓடும் காரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிர் தப்பினர்.
கேரள மாநிலம் மூணாறு அருகே உள்ள கல்லார் பகுதியை சேர்ந்தவர் ராஜாங்கம் (வயது 58). அவருடைய மனைவி முருகேஸ்வரி (53). இந்த தம்பதியின் மகன் ராஜேஷ்குமார் (32). நேற்று இவர்கள் 3 பேரும், தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள மூங்கிலணை காமாட்சியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடிவு செய்தனர். இதற்காக அவர்கள், தேவதானப்பட்டி நோக்கி ஒரு காரில் புறப்பட்டனர். காரை ராஜேஷ்குமார் ஓட்டினார்.
போடி-தேனி சாலையில், போடி விலக்கு அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது காரின் முன்பகுதியில் இருந்து புகை கிளம்பியது. சிறிதுநேரத்தில் கார் திடீரென தீப்பற்றியது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜேஷ்குமார் காரை சாலையோரமாக நிறுத்தினார். பின்னர் காரில் இருந்த 3 பேரும் அலறியடித்து கொண்டு கீழே இறங்கி சிறிது தூரம் ஓடினர். இதனால் அவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். இதற்கிடையே காரில் பற்றிய தீ மள, மளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது.
இதுகுறித்து தேனி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படைவீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடானது. இந்த சம்பவம் குறித்து, பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.