தேனி அருகேபிளஸ்-2 மாணவர் கொலை வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது:காதல் விவகாரத்தில் தீர்த்துக் கட்டியது அம்பலம்
தேனி அருகே பிளஸ்-2 மாணவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். காதல் விவகாரத்தில் கொலை நடந்ததாக தெரியவந்தது.
மாணவர் படுகொலை
தேனி அருகே வீருசின்னம்மாள்புரத்தை சேர்ந்தவர் சரவணன். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ஊஞ்சம்மாள் (41). இவர்களுடைய மகன் கமலேஸ்வரன் (18). இவர் பூதிப்புரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். சமீபத்தில் நடந்த பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தார்.
கடந்த 14-ந்தேதி மாலையில் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெளியே சென்ற கமலேஸ்வரன் இரவு வரை வீடு திரும்பவில்லை. மறுநாள் மாலையில் பூதிப்புரம் கல்லூருணி காடு செல்லும் சாலையில் ஒரு தனியார் தோட்டத்து கிணற்று மேட்டில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கமலேஸ்வரன் உடல் கிடந்தது. இந்த சம்பவம் குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
3 பேர் கைது
கொலை செய்யப்பட்ட கமலேஸ்வரனின் தாய், பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில், தனது மகன் போடேந்திரபுரத்தை சேர்ந்த தன்னாசி மகளை காதலித்ததாகவும், அதனால், தன்னாசி (50), அவருடைய மனைவி தமிழ்செல்வி (45) ஆகியோர் கொலை செய்து இருப்பதாகவும் கூறி இருந்தார்.
அதன்பேரில், தன்னாசி, தமிழ்செல்வி இருவரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். ஆனால், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய புலன் விசாரணையில், மாணவர் கமலேஸ்வரனை தன்னாசி சரமாரியாக வெட்டி கொலை செய்ததாகவும், அவருடைய மனைவி தமிழ்செல்வி, மகன் ஜெயப்பிரகாஷ் (27) ஆகியோர் இந்த கொலைக்கு உடந்தையாகவும், தூண்டுதலாகவும் இருந்ததாக தெரியவந்தது.
இதையடுத்து தன்னாசி, தமிழ்செல்வி, ஜெயப்பிரகாஷ் ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களை போலீசார் தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பரபரப்பு வாக்குமூலம்
கைதான தன்னாசி போலீசாரிடம் பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், 'எனது மகளுடன், கமலேஸ்வரன் சமூக வலைத்தளம் மூலம் அறிமுகமாகி பழகி வந்தார். பின்னர் அவர் எனது மகளை காதலித்தார். இருவரும் மோட்டார் சைக்கிளில் சுற்றி வந்ததாக எனக்கு தெரியவந்தது. நான் கமலேஸ்வரனை வீட்டுக்கு சென்று கண்டித்தேன். ஆனாலும் அவர் எனது மகளை தொடர்ந்து காதலித்து, மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றதாக தெரியவந்தது. வீரபாண்டி திருவிழாவுக்கும் மகளை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றதாக கேள்விப்பட்டேன். இதனால் கமலேஸ்வரனை கொலை செய்ய முடிவு செய்தேன். சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த அவரை வழிமறித்து மறைத்து வைத்து இருந்த பட்டா கத்தியால் சரமாரியாக வெட்டினேன். அதில் அவர் இறந்து விட்டார். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில் போலீசார் பிடித்து விட்டனர்' என்று வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
மாணவர் கொலை வழக்கில் கொலையாளிகளை கைது செய்த இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணன் தலைமையிலான தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர்கள் கதிரேசன், சுல்தான்பாட்ஷா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன், ஏட்டுகள் கணேசன், விஜய், செல்வம் ஆகியோரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே பாராட்டினார்.
========
திட்டம் தீட்டி கொலை; கூட்டாளிக்கு வலைவீச்சு
மாணவர் கமலேஸ்வரனை கொலை செய்வதற்கு தன்னாசி முன்கூட்டியே திட்டம் தீட்டி செயல்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கொலை சம்பவம் நடப்பதற்கு 4 நாட்களுக்கு முன்பே தன்னாசியின் செல்போன் எண் அணைத்து வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. அது போலீசாருக்கு அவர் மீதான சந்தேகத்தை வலுப்படுத்தியது.
மேலும், அவர், கொலை நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பே அந்த வழியாக நோட்டமிட்டுச் சென்றுள்ளார். அது அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த கொலை வழக்கில் தன்னாசிக்கு அவருடைய நண்பர் ஒருவர் திட்டம் தீட்டிக் கொடுத்து உடந்தையாக இருந்ததாகவும் போலீசாருக்கு தெரியவந்தது. அதன்பேரில் அவருடைய கூட்டாளியையும் போலீசார் தேடி வருகின்றனர்.
பல்வேறு வழக்குகள்
கைதான தன்னாசி மீது கண்டமனூர் போலீஸ் நிலையத்தில் 2007-ம் ஆண்டு ஒரு கொலை வழக்கு உள்ளது. மேலும், அவர் மீது திருட்டு, வழிப்பறி, மதுவிற்பனை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.