தாளவாடி அருகே கும்கி யானையை ஏற்றி சென்ற லாரியை விவசாயிகள் சிறைபிடிப்பு
தாளவாடி அருகே கும்கி யானையை ஏற்றி சென்ற லாரியை விவசாயிகள் சிறைபிடித்தனர்.
தாளவாடி
தாளவாடி அருகே கும்கி யானையை ஏற்றி சென்ற லாரியை விவசாயிகள் சிறைபிடித்தனர்.
கும்கி யானைகள்
ஈரோடு மாவட்டம் தாளவாடி மற்றும் ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கருப்பன் என்ற ஒற்றை யானை விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தது. இதைத்தொடர்ந்து கருப்பன் யானையை பிடிக்க கோவை மாவட்டம் பொள்ளாச்சி டாப்சிலிப்பில் இருந்து கலீம், அரிசி ராஜா, கபில்தேவ் ஆகிய 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. இவை ஜோரகாடு ரங்கசாமி கோவில் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டன.
இதையடுத்து மருத்துவக் குழுவினர் கடந்த 13-ந் தேதி கருப்பன் யானையை பிடிக்க மயக்க ஊசி செலுத்தினார்கள். ஆனால் மயக்க ஊசி செலுத்தியும் மயங்காத கருப்பன் யானை வனப்பகுதிக்கு தப்பி சென்றது. இதனால் கருப்பன் யானையை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வந்தனர் இதன் காரணமாக யானையை பிடிக்கும் முயற்சி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
லாரி சிறைபிடிப்பு
இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் கும்கி கலீம் யானையை ரங்கசாமி கோவில் பகுதியில் இருந்து பொள்ளாச்சி டாப் சிலிப்புக்கு கொண்டு செல்ல லாரியில் வனத்துறையினர் ஏற்றியுள்ளதாக ஜோரகாடு, கரளவாடி, திகனாரை பகுதி விவசாயிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து விவசாயிகள் அங்கு சென்று அந்த லாரியை தடுத்து நிறுத்தி சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தகவல் கிடைத்து வனச்சரகர் ராமலிங்கம், சதீஸ் மற்றும் தாளவாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனும் அங்கு சென்றனர். அப்போது கிராம மக்கள் வனத்துறையினரிடம் கூறும்போது, 'கருப்பன் யானையை பிடிக்கும் வரை கும்கி யானைகளை கொண்டு செல்லக்கூடாது' என்றனர்.
டாப்சிலிப்புக்கு புறப்பட்டது
அதற்கு வனத்துறையினர் கூறும்போது, 'யானை பாகன்களுக்கு தாய்லாந்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பாகன்கள் இல்லாமல் கும்கி யானையை தற்போது இங்கு வைத்திருக்க முடியாது. மேலும் மயக்க ஊசியும் இன்னும் வரவில்லை. அதேபோல 8 நாட்கள் பாகன்களுக்கு பயிற்சி முடிந்ததும் மீண்டும் பிப்ரவரி மாதம் 8-ந் தேதி அல்லது 9-ந் தேதி கும்கி யானைகள் தாளவாடி பகுதிகளுக்கு கொண்டுவரப்பட்டு கருப்பன் யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாளை (அதாவது இன்று) கபில்தேவ், அரிசி ராஜா கும்கி யானைகளும் பொள்ளாச்சி டாப் சிலிப் பகுதிக்கு கொண்டு செல்லப்படும்' என்றனர்.
அதை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் லாரியை விடுவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் இரவு 8 மணி அளவில் லாரி அங்கிருந்து பொள்ளாச்சி டாப்சிலிப்புக்கு புறப்பட்டது.
விவசாயிகள் கும்கி யானை ஏற்றப்பட்ட லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சுமார் 4 மணி நேரம் பரபரப்பு நிலவியது.