தாளவாடி அருகே கருப்பன் யானை மீண்டும் அட்டகாசம்
தாளவாடி அருகே கருப்பன் யானை மீண்டும் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. 2 ஏக்கர் கரும்பு பயிரை நாசம் செய்தது.
தாளவாடி
தாளவாடி அருகே கருப்பன் யானை மீண்டும் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. 2 ஏக்கர் கரும்பு பயிரை நாசம் செய்தது.
கருப்பன் யானை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. யானைகள் அவ்வப்போது உணவு, தண்ணீர் தேடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன.
கடந்த 1 வருடத்துக்கு முன்பு தாளவாடி மற்றும் ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை விவசாய தோட்டத்தில் புகுந்து தொடர்ந்து பயிர்களை நாசம் செய்து வந்தது. கருப்பன் என்று பெயரிடப்பட்ட அந்த யானை தோட்டத்தில் காவலுக்கு இருந்த தர்மபுரம் பகுதியை சேர்ந்த மல்லப்பா மற்றும் திகினாரை ஜோரைகாடு பகுதியை சேர்ந்த மாதேவா என்ற 2 விவசாயிகளை மிதித்து கொன்றது.
மயங்கவில்லை
கருப்பன் யானை விடாமல் நாள்தோறும் தோட்டத்தில் புகுந்து தொடர்ந்து கரும்பு, வாழை, மக்காச்சோளம், முட்டைக்கோஸ் பயிர்களை சேதம் செய்து வந்தது. யானையை விரட்டும் விவசாயிகளையும் துரத்தியது.
இதனால் கருப்பன் யானையை பிடிக்க பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் இருந்து கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டன. ஆனால் மருத்துவ குழுவினர் 2 முறை துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தியும், கருப்பன் யானை மயங்கவில்லை. காட்டுக்குள் ஓடிவிட்டது. அதன்பின்னர் 10 நாட்களாக கருப்பன் யானை காட்டை விட்டு வெளியே வரவில்லை.
மீண்டும் அட்டகாசம்
இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக கருப்பன் யானை காட்டை விட்டு வெளியே வந்து மீண்டும் அட்டகாசத்தில் இறங்கியுள்ளது.
நேற்று முன்தினம் இரவு கும்டாபுரம், பகுதியை சேர்ந்தவர் சின்ராஜ் என்பவரின் கரும்பு தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்தது. இது பற்றி தாளவாடி வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
உடனே அங்கு வந்த வனத்துறையினர் பொதுமக்களுடன் சேர்ந்து கருப்பன் யானையை விரட்ட முயன்றார்கள்.
பயிர்கள் நாசம்
நீண்ட நேரம் போக்கு காட்டிய யானை நள்ளிரவு 1 மணி அளவில் அருகே உள்ள மகாராஜன்புரம் சென்று அங்குள்ள மானாவாரி நிலத்தில் சுற்றி திரிந்தது. பின்னர் அதிகாலை காட்டுக்குள் சென்றது.
யானை புகுந்ததில் 2 ஏக்கர் கரும்பு பயிர்கள் நாசமானது. அதற்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்த விவசாயிகள் கருப்பன் யானையை விரைந்து பிடித்தால்தான் எங்களுக்கு நிம்மதி ஏற்படும் என்றார்கள்.