தாளவாடி அருகே 2-வது நாளாக அரசு பள்ளி மாணவ- மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

தாளவாடி அருகே 2-வது நாளாக அரசு பள்ளிக்கூட மாணவ- மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-10-13 22:29 GMT

தாளவாடி

தாளவாடி அருகே 2-வது நாளாக அரசு பள்ளிக்கூட மாணவ- மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

தாளவாடி மலைப்பகுதியில் உள்ள குன்னன்புரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 143 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளிக்கூடத்தில் பனஹள்ளி, பாளையம், ஜீரஹள்ளி, எரணஹள்ளி, சிங்கன்புரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மலைக்கிராம மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். ஆசிரியர் பற்றாக்குறை, அடிப்படை வசதி இல்லாததை கண்டித்தும் அரசின் கவனத்தை ஈர்க்கவும் நேற்று முன்தினம் பள்ளிக்கூட மாணவ- மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் பள்ளிக்கூடத்தில் ஆய்வு மேற்கொண்ட வட்டார கல்வி அலுவலர் பாக்யராஜ் இதுபற்றி கூறுகையில், ' பொறுப்பு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்,' என்றார்.

2-வது நாளாக...

எனினும் பள்ளிக்கூட மாணவ- மாணவிகள் பள்ளிக்கு வராமல் தொடர்ந்து 2-வது நாளாக வகுப்பறை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து தாளவாடி தாசில்தார் உமாமகேஸ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன், வட்டார கல்வி அலுவலர் பாக்யரதி, பவானிசாகர் தொகுதி பண்ணாரி எம்.எல்.ஏ. மற்றும் மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. அப்போது மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள் கூறுகையில், 'ஆசிரியர் பற்றாக்குறையால் பள்ளிக்கூட மாணவ- மாணவிகளின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாக பலமுறை அதிகாரிகளுக்கு தெரிவித்தும், ஆசிரியர் பற்றாக்குறையை நீக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், கழிவறை வசதி கூட இல்லாமல் மாணவிகள் அவதிப்படுவதாகவும்,' குற்றம் சாட்டினர். அப்போது வட்டார கல்வி அதிகாரி கூறுகையில், '2 பொறுப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்ததுடன், கழிப்பிட வசதிகளை விரைவில் செய்து தருவதுடன், புதிய கட்டிடம் கட்ட அரசுக்கு கோரிக்கை வைக்கப்படும்,' எனவும் தெரிவித்தார். இதில் மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள் சமாதானம் அடைந்ததுடன், மாணவ- மாணவிகளின் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தையும் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்