தாளவாடி அருகேஅருள்வாடி கிராமத்தில்2-வது நாளாக முகாமிட்டுள்ள யானைகள்
தாளவாடி அருகே அருள்வாடி கிராமத்தில் 2-வது நாளாக யானைகள் முகாமிட்டன.
தாளவாடி
தாளவாடி அருகே ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உள்பட்டது அருள்வாடி கிராமம். தமிழக-கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் மாலை கர்நாடக வனப்பகுதியில் இருந்து கூட்டமாக வெளியேறிய யானைகள் அருள்வாடி கிராமம் அருகே உள்ள மானாவாரி நிலத்தில் புகுந்தது. பின்னர் அங்கும் இங்கும் நிலத்தில் சுற்றி திரிந்தது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஜீர்கள்ளி வனத்துறையினர் அங்கு சென்று, யானைகள் விவசாய தோட்டத்தில் புகாதவாறு ரோந்து பணியில் ஈடுபட்டனர். எனினும் யானைகள் நேற்று 2-வது நாளாக அருள்வாடி கிராமம் அருகே முகாமிட்டு சுற்றி வருகின்றன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, 'வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டவும், யானைகள் புகாதவாறு அகழிகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.