தாளவாடி அருகேபசுமாட்டை கடித்து கொன்ற சிறுத்தைப்புலி

தாளவாடி அருகே பசுமாட்டை சிறுத்தைப்புலி கடித்து கொன்றது.

Update: 2023-04-15 22:10 GMT

தாளவாடி

தாளவாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட சூசைபுரம், தொட்டகாஜனூர், பீம்ராஜ்நகர் பகுதியில் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறுத்தைப்புலி தொடர்ச்சியாக ஆடு, மாடு, காவலுக்கு உள்ள நாய்களை வேட்டையாடி வந்தது.

கால்நடைகளை கொன்ற பின்னர் வனப்பகுதியை ஒட்டியுள்ள கல்குவாரி பாறைகளுக்குள் சென்று அந்த சிறுத்தைப்புலி பதுங்கி விடும். இதனால் வனத்துறையினர் அந்த சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க முடியாமல் இருந்தனர்.

இதற்கிடையே கடந்த 6 மாதங்களாக சிறுத்தைப்புலி எந்த கால்நடைகளையும் வேட்டையாடவில்லை. அதனால் விவசாயிகள் அடர்ந்த காட்டுக்குள் சிறுத்தைப்புலி சென்றுவிட்டது. இனி வெளியே வராது என்று ஆறுதல் அடைந்திருந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சிறுத்தைப்புலி மீண்டும் கிராமத்துக்குள் நுழைந்து பசுமாட்டை கடித்து கொன்றுள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

தொட்டகாஜனூரை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 50). விவசாயி. இவர் 4 பசுமாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டு வாசலிலேயே பசுமாடுகளை கட்டி வைத்துவிட்டு தூங்கச்சென்றுவிட்டார்.

நேற்று காலை எழுந்து வாசலுக்கு வந்து பார்த்தபோது பொன்னுச்சாமி அதிர்ச்சி அடைந்தார். ஒரு பசுமாடு உடலில் பல இடங்களில் கடித்து குதறப்பட்ட நிலையில் செத்துக்கிடந்தது. இதுபற்றி உடனே தாளவாடி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த வனத்துறையினர் சம்பவ இடத்தில் பதிவாகியிருந்த கால் தடங்களை ஆய்வு செய்தனர். பின்னர் மாட்டின் உடலை கால்நடை டாக்டர் பிரேத பரிசோதனை செய்தார்.

அதன்பின்னர் வனத்துறையினர் கூறும்போது, பசுமாட்டை கடித்து கொன்றது சிறுத்தைப்புலி என்றனர். 6 மாதமாக காட்டை விட்டு வெளியே வராமல் இருந்த சிறுத்தைப்புலி மீண்டும் கிராமத்துக்குள் நுழைந்து பசுமாட்டை வேட்டையாடி இருப்பது கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகளிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. அதனால் விரைவில் கூண்டு வைத்து சிறுத்தைப்புலியை பிடிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்