தாளவாடி அருகே ஆடுகளை கொன்று சிறுத்தைப்புலி அட்டகாசம் கூண்டு வைத்து பிடிக்க விவசாயிகள் கோரிக்கை

தாளவாடி அருகே ஆடுகளை கொன்று அட்டகாசம் செய்த சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2023-10-13 01:36 GMT

தாளவாடி

தாளவாடி அருகே ஆடுகளை கொன்று அட்டகாசம் செய்த சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

விவசாயி

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி, ஜீர்கள்ளி வனச்சரகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் இருந்து சிறுத்தைப்புலிகள் அடிக்கடி வெளியேறி விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்களை கொன்று வருவது தொடர்கதையாகி வருகிறது. இதுபோன்ற சம்பவம் ஜீர்கள்ளி வனச்சரகத்துக்குட்பட்ட பகுதியில் நடந்து உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

ஜீர்கள்ளி வனச்சரகத்துக்குட்பட்ட சிமிட்டஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சிவமல்லப்பா (வயது 49). விவசாயி. இவர் தன்னுடைய விவசாய தோட்டத்தில் ஆடு, மாடு வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை தன்னுடைய தோட்டத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிறுத்தைப்புலி ஒன்று 2 ஆடுகளை கடித்து கொன்றது.

சாவு

இந்த நிலையில் மாலையில் ஆடுகளை பிடித்து வர சிவமல்லப்பா சென்றார். அப்போது 2 ஆடுகள் கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது கண்டு அதிா்ச்சி அடைந்தார். உடனே அவர் இதுகுறித்து ஜீர்கள்ளி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். தகவல் தெரிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விைரந்து சென்று தோட்டத்தில் பதிவாகி இருந்த கால் தடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது சிறுத்தைப்புலியின் கால் தடம் என்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர். எனவே ஆடுகளை சிறுத்தைப்புலி கடித்து கொன்றது உறுதியானது.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், 'ஆடுகளை கொன்று அட்டகாசம் செய்து வரும் சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்,' என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்