தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்து காட்டு யானை அட்டகாசம்
தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்து காட்டு யானை அட்டகாசம் செய்தது.
தாளவாடி
தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்து காட்டு யானை அட்டகாசம் செய்ததில் மக்காச்சோள பயிர் நாசம் அடைந்தது.
மக்காச்சோளம் சாகுபடி
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட 10 வனச்சரகங்களில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. உணவு மற்றும் தண்ணீரை தேடி யானைகள் அடிக்கடி காட்டை விட்டு ெவளியேறி வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்கின்றன. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இந்தநிலையில் ஜீர்கள்ளி வனச்சரகத்துக்குட்பட்ட திகனாரை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 49). இவர் 3 ஏக்கர் தோட்டத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்திருந்தார்.
தீப்பந்தம் காட்டி விரட்டினர்
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு காட்டு யானை திகனாரைக்கு வந்தது. பின்னர் கிருஷ்ணமூர்த்தியின் தோட்டத்தில் புகுந்து மக்காச்சோள பயிர்களை நாசம் செய்ய தொடங்கியது.
தோட்டத்தில் காவலுக்கு இருந்த கிருஷ்ணமூர்த்தி அக்கம் பக்கத்து விவசாயிகளை செல்போனில் உதவிக்கு அழைத்தார். அதன்பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒலி எழுப்பியும், தீப்பந்தம் காட்டியும் யானையை விரட்ட முயன்றார்கள்.
அகழி அமைக்க கோரிக்கை
சுமார் 3 மணி நேரத்துக்கு பிறகே யானை தோட்டத்தை விட்டு சென்றது. யானை புகுந்ததில் ½ ஏக்கர் பரப்பளவிலான மக்காளச்சோள பயிர் நாசமானது. சேதமடைந்த பயிருக்கு வனத்துறையினர் இழப்பீடு பெற்றுத்தரவேண்டும்.
யானைகள் வழக்கமாக வெளியேறும் பாதைகளில் அகழி அமைக்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.