தாளவாடி அருகே உள்ள தரைமட்ட பாலங்களை உயர்மட்ட பாலமாக கட்ட வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை

தாளவாடி அருகே உள்ள தரைமட்ட பாலங்களை உயர்மட்ட பாலமாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்

Update: 2022-10-16 21:25 GMT

தாளவாடி

தாளவாடி அருகே உள்ள தரைமட்ட பாலங்களை உயர்மட்ட பாலமாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

10-க்கும் மேற்பட்ட ஓடைகள்

தாளவாடி சுற்றுவட்டார பகுதிகளில் 80-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும், விவசாயிகள் தங்களுடைய காய்கறிகள் போன்ற விவசாய விளைபொருட்களை எடுத்து செல்லவும் தினந்தோறும் தாளவாடி சென்று வருவது வழக்கம்.

தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட ஓடைகள் உள்ளன. இந்த ஓடைகளில் மழைக்காலங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும்.

விவசாயிகள்- மாணவர்கள் அவதி

இந்த ஓடைகளின் வழியாக சாலைகள் அமைக்கப்பட்டு அதன் வழியாக போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதற்காக ஓடைகளின் குறுக்கே தரைமட்ட பாலங்கள் கட்டப்பட்டு உள்ளன.

மழைக்காலங்களில் ஓடைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும்போது தரைப்பாலங்களை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்கிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படுவது வாடிக்கையான நிகழ்வாக மாறிவிட்டது. இதன்காரணமாக மழைக்காலங்களில் தாளவாடி பகுதியில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். மேலும் விவசாயிகள் தங்களுடைய விளைபொருட்களை விற்பனை செய்ய முடியாமல் சிரமப்படுகிறார்கள். மேலும் உரிய நேரத்துக்கு செல்ல முடியாமல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளும் அவதிப்படுகிறார்கள்.

உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும்

எனவே தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் சாலையில் சிக்கள்ளி அருகே உள்ள தரைப்பாலத்தையும், ஆசனூரில் இருந்து கர்நாடக மாநிலம் கொள்ளேகால் செல்லும் சாலையில் அரேபாளையம் அருகே உள்ள தரைப்பாலத்தையும், தாளவாடியை அடுத்த தொட்டகாஜனூரில் இருந்து மெட்டல்வாடி செல்லும் சாலையில் உள்ள தரைபாலத்தையும் உயர்மட்டபாலமாக அமைத்து தர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்