ஸ்ரீவைகுண்டம் அருகே ஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு

ஸ்ரீவைகுண்டம் அருகே ஆட்டோ டிரைவருக்கு அரிவாளால் வெட்டிய ௩ மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2022-08-17 15:10 GMT

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் அருகே தெற்கு வாழவல்லானை அடுத்த திருப்பணி செட்டியாபத்தைச் சேர்ந்த ஆத்திமுத்து மகன் மாரிசன் (வயது 27). ஆட்டோ டிரைவர். இவரது நண்பரின் ஆட்டோ பழுது பார்ப்பதற்காக நெல்லையில் விடப்பட்டிருந்தது. அந்த ஆட்டோவை நெல்லையிலிருந்து எடுத்து வருவதற்காக மாரிசன் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் நெல்லையிலிருந்து திரும்பி வரும் போது ஆட்டோவை நண்பரும், மோட்டார் ைசக்கிளை மாரிசனும் ஓட்டி வந்தனர்.ஸ்ரீவைகுண்டத்திலிருந்து ஆழ்வார்தோப்பு ரோட்டில் தனியார் சேம்பர் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது, 3 மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளை நடுரோட்டில் வழிமறித்து நிறுத்தி, மாரிசனின் செல்போனை பறிக்க முயன்றனர். அவர் செல்போனை கெட்டியாக பிடித்துக் கொண்டார், ஆத்திரம் அடைந்த 3 பேரில் ஒருவர் அரிவாளால், அவரை சரமாரியாக வெட்டி விட்டு மற்ற 2 பேருடன் தப்பியோடி விட்டார். படுகாயம் அடைந்த மாரிசன் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் போலீஸ் . சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய 3 மர்ம நபர்களையும் வலைவீசி தேடி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்