சிவகிரி அருகே அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்- வாகன வசதி;பொதுமக்களின் அறிவிப்புக்கு பாராட்டுகள் குவிகின்றன

சிவகிரி அருகே அரசு பள்ளிக்கூடத்தில் சேரும் மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள் மற்றும் வாகன வசதி ஏற்படுத்தப்படும் என்று சுவரொட்டி ஒட்டிய பொதுமக்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

Update: 2023-04-13 21:43 GMT

சிவகிரி

சிவகிரி அருகே அரசு பள்ளிக்கூடத்தில் சேரும் மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள் மற்றும் வாகன வசதி ஏற்படுத்தப்படும் என்று சுவரொட்டி ஒட்டிய பொதுமக்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

தொடக்கப்பள்ளி

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே மாரப்பம்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. மரங்கள் சூழ்ந்து இயற்கை சூழலில் இந்த பள்ளிக்கூடம் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த பள்ளிக்கூடத்தில் தரமான கல்வி, குடிநீர் வசதி, சுகாதாரமான உணவு, காற்றோட்ட வசதியுடன் கூடிய கட்டிடங்கள் என அடிப்படை வசதிகள் நன்றாக உள்ளது. இதனால் இந்த பள்ளிக்கூடத்துக்கு மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் வருகிறார்கள்.

சலுகைகள்

இந்த பள்ளிக்கூடத்தில் வருகிற 2023- 24-ம் கல்வி ஆண்டில் அதிக அளவில் மாணவ- மாணவிகளை சேர்க்க ஊர் பொதுமக்கள் எண்ணினர்.

இதைத்தொடர்ந்து மாரப்பம்பாளையம் தொடக்கப்பள்ளிக்கூடத்தில் சேரும் மாணவ- மாணவிகளுக்கு ஊர் பொதுமக்கள் சார்பாக சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இலவச சைக்கிள்- வாகன வசதி

அதன்படி மாரப்பம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளிக்கூடத்தில் சேரும் மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக சைக்கிள் ஒன்று வழங்கப்படும். மேலும் பள்ளிக்கூடத்துக்கு மாணவ- மாணவிகள் வந்து போக வாகனங்கள் வசதி ஏற்படுத்தி தரப்படும் என அந்த ஊர் பொதுமக்கள் சுவரொட்டி ஒட்டி உள்ளனர்.

மேலும் பள்ளிக்கூடத்தின் இரும்பு கிரில் கதவிலும் இதுகுறித்த அறிவிப்பு பேனரும் வைத்துள்ளனர்.

சிவகிாி பகுதியில் ஒட்டியுள்ள சுவரொட்டி அந்த பகுதிைய சேர்ந்த பலரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது. அந்த ஊர் பொதுமக்களின் இந்த முயற்சிக்கு மற்ற ஊர் பொதுமக்கள் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து உள்ளனர். அதுமட்டுமின்றி இந்த தகவல் வாட்ஸ்-அப், முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பொதுமக்களின் இந்த அறிவிப்புக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்