செஞ்சி அருகே நாட்டு வெடி குண்டுகள் வெடித்து 4 நாய்கள் செத்தன கரும்பு வயலில் கிடந்த 30 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்
செஞ்சி அருகே நாட்டு வெடி குண்டுகள் வெடித்து 4 நாய்கள் செத்தன. மேலும் கரும்பு வயலில் கிடந்த 30 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.;
செஞ்சி,
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த கம்பந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சாமிக்கண்ணு மகன் தங்கராஜ். இவர் தனது நிலத்தில் கரும்பு சாகுபடி செய்து உள்ளார். இவரது கரும்பு வயலில் வாய் சிதைந்த நிலையில் 4 நாய்கள் செத்துக்கிடந்தன. மேலும் அங்கு 30 நாட்டு வெடிகுண்டுகளும் இருந்தன. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தங்கராஜ், இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில் அவ்வூர் கிராம நிர்வாக அலுவலர் ஞானசேகர், செஞ்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நாட்டு வெடிகுண்டுகளை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
பறிமுதல்
அப்போது காட்டுப்பன்றிகளை பிடிப்பதற்காக யாரோ மர்ம நபர்கள் கரும்பு வயலில் நாட்டு வெடிகுண்டுகளை வைத்துள்ளது தெரியவந்தது. மேலும் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் 4 நாய்களும் செத்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு கிடந்த 30 நாட்டு வெடிகுண்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நாட்டு வெடிகுண்டுகளை கரும்பு வயலில் வைத்து சென்றவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வயலில் வைக்கப்பட்டிருந்த 30 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.