சத்தியமங்கலம் அருகேதூக்குப்போட்டு ஆசிரியையின் கணவர் தற்கொலை
சத்தியமங்கலம் அருகே தூக்குப்போட்டு ஆசிரியையின் கணவர் தற்கொலை செய்து கொண்டாா்.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் அருகே உள்ள செண்பகப்புதூரை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 38). அவருடைய மனைவி கோமதி (35). இவர்கள் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கோமதி புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
கிருஷ்ணகுமாருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. எனவே கோமதி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தனது 2 பெண் குழந்தைகளை அழைத்துக் கொண்டு புஞ்சைபுளியம்பட்டிக்கு சென்று அங்கு வாடகைக்கு வீடு எடுத்து குடியிருந்து வந்தார்.
இந்த நிலையில் கிருஷ்ணகுமாரின் வீடு உள்பக்கமாக பூட்டி இருப்பதாக கேள்விப்பட்டு கோமதி செண்பகப்புதூர் வந்தார். பின்னர் கதவை தட்டிப்பார்த்தார். ஆனால் வெகு நேரமாக திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த கோமதி உறவினர்கள் உதவியுடன் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது கிருஷ்ணகுமார் அங்குள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தொங்கி கொண்டிருந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு் கிருஷ்ணகுமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் வாழ்க்கையில் மனமுடைந்து காணப்பட்டு வந்த கிருஷ்ணகுமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.