சத்தியமங்கலம் அருகே கீழ்பவானி வாய்க்காலில் நீர்கசிவு; சரிசெய்யும் பணி தீவிரம்
சத்தியமங்கலம் அருகே கீழ்பவானி வாய்க்காலில் நீர்கசிவு; சரிசெய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
சத்தியமங்கலம் அருகே கீழ்பவானி வாய்க்காலில் நீர்கசிவு ஏற்பட்டது. இதனை சரிசெய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தண்ணீர் திறப்பு
சத்தியமங்கலம் அருகே உள்ள உக்கரம் காளிகுளம் பகுதி வழியாக கீழ்பவானி வாய்க்கால் செல்கிறது. இதன் இடது கரையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லேசாக உடைப்பு ஏற்பட்டிருந்தது. அதன் வழியாக சிறிது சிறிதாக நீர் கசிந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த மாதம் 15-ந் தேதி பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக வினாடிக்கு 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. தற்போது வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
நீர்கசிவு
தொடர்ந்து நீர்வரத்து காரணமாக உக்கரம் வழியாக செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் உடைப்பு பெரிதாகி உள்ளது. இதனால் வாய்க்காலில் இருந்து அதிக அளவில் தண்ணீர் வெளியேறி வருகிறது.
இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து அதிகாரிகள் அங்கு சென்று நீர்கசிவு ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டனர். இதையடுத்து சரிசெய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்கள். உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து நீர்கசிவை தடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பொதுமக்கள்
இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறும்போது, 'உக்கரம் காளிகுளம் வழியாக செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே உடைப்பு ஏற்பட்டு நீர் கசிவு ஏற்பட்டது.
தற்போது உடைப்பு பெரிதாகியுள்ளதால் அதிக அளவு நீர் செல்கிறது. அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு நீர்கசிவை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெருந்துறை, நம்பியூர் பகுதி வழியாக செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி பெரும் சேதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.