சத்தியமங்கலம் அருகேகுடிசையில் தீ; 7 ஆடுகள் கருகி சாவு

சத்தியமங்கலம் அருகே குடிசையில் ஏற்பட்ட தீயில் 7 ஆடுகள் கருகி இறந்தன. மாட்டு வண்டியும் எரிந்து நாசம் ஆனது.

Update: 2023-03-30 22:08 GMT

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் அருகே குடிசையில் ஏற்பட்ட தீயில் 7 ஆடுகள் கருகி இறந்தன. மாட்டு வண்டியும் எரிந்து நாசம் ஆனது.

தீ விபத்து

சத்தியமங்கலம் சதுமுகை அருகே உள்ள ஆலத்துக்கோம்பையை சேர்ந்தவர் கிட்டான். விவசாயி. இவருடைய மனைவி ராஜம்மாள். இவர்கள் தங்களுடைய வீட்டின் அருகே ஓலை குடிசை அமைத்து அதில் மாட்டு வண்டியை நிறுத்தி வைத்து உள்ளனர். மேலும் தாங்கள் வளர்த்து வந்த 7 ஆடுகளையும் அந்த ஓலை குடிசையில் கட்டி வந்து உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு 7 ஆடுகளையும் ஓலை குடிசையில் அடைத்துவிட்டு கிட்டானும், ராஜம்மாளும் அருகில் உள்ள வீட்டில் தூங்க சென்றனர். வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது நள்ளிரவில் ஆடுகள் சத்தம் போட்டு கத்தியதை கேட்டதும் கிட்டானும், ராஜம்மாளும் திடுக்கிட்டு எழுந்தனர். உடனே அவர்கள் வீட்டின் கதவை திறந்து வெளியே வந்து பார்த்தபோது குடிசை தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்ததை கண்டதும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் தீயை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.

7 ஆடுகள் கருகி சாவு

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் ஓலை குடிசை முழுவதும் எரிந்து சாம்பல் ஆனதுடன், 7 ஆடுகளும் கருகி இறந்தன. மேலும் குடிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாட்டு வண்டியும் எரிந்து நாசம் ஆனது. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுபற்றி அறிந்ததும் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கே.சி.பி.இளங்கோ சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த ஆடுகள் மற்றும் எரிந்து சாம்பலான மாட்டு வண்டியை பார்த்து கிட்டானுக்கு ஆறுதல் கூறினார். மேலும் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நிவாரணம் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அப்போது ஒன்றிய குழு உறுப்பினர் பற்குணன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்