சத்தியமங்கலம் அருகே சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து 11 பேர் படுகாயம்
11 பேர் படுகாயம்
சத்தியமங்கலத்தை அடுத்த வடவள்ளி பகுதியில் இருந்து ஆண்களும், பெண்களும் என மொத்தம் 15 விவசாய தொழிலாளர்கள் சரக்கு வேன் ஒன்றில் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் உள்ள தென்னந்தோப்புக்கு விவசாய பணிகளுக்காக சென்றனர். சரக்கு வேனை திருப்பூர் பெரிச்சிபாளையத்தை மகேந்திரன் (வயது 50) என்பவர் ஓட்டினார்.
சத்தியமங்கலத்தை அடுத்த முருகன் கோவில் மேடு என்ற இடம் அருகே சென்றபோது சரக்கு வேன் நிலைதடுமாறி ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வடவள்ளியை சேர்ந்த அம்மாசை (46), சுரேஷ் (39), சக்திவேல் (37), சித்ரா (31), திலகா (36), ரங்கசாமி (33), நடராஜ் (40), துரை (38), தங்கவேல் (36), சுரேஷ் (38), கதிர்வேல் (38) ஆகிய 11 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தை கண்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அம்மாசை, சித்ரா, திலகா, சக்திவேல் ஆகிய 4 பேர் மேல் சிகிச்சைக்காக சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் டிரைவர் மகேந்திரன் காயமின்றி உயிர் தப்பினார். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.