சாத்தான்குளம் அருகே2 மோட்டார் சைக்கிள் மோதல்;முதியர் படுகாயம்
சாத்தான்குளம் அருகே 2 மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் முதியர் படுகாயம் அடைந்தார்.
தட்டார்மடம்:
தட்டார்மடம் அருகேயுள்ள தாமரைமொழியை சேர்ந்தவர் சுடலைக்கண்ணு (வயது 60). இவர் பூச்சிக்காடு பிள்ளைவிளையை சேர்ந்த திருமணவேல் என்பவரது தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று பூச்சிக்காட்டில் இருந்து மற்றொரு தோட்டத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பூச்சிக்காடு- திசையன்விளை சாலையில் சென்றபோது, எதிரே உடன்குடி சீர்காட்சி விரதபுரத்தை சேர்ந்த முருகேசன் மகன் மணிகண்டன் (20) என்பவர் மோட்டார்சைக்கிளில் வந்துகொண்டிருந்துள்ளார். கண் இமைக்கும் நேரத்தில் இரண்டு மோட்டார்சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சுடலைக் கண்ணு பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மணிகண்டன் லேசான காயங்களுடன் தப்பினார். இதுகுறித்து தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குரூஸ் மைக்கேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.