புஞ்சைபுளியம்பட்டி அருகேஇரும்பாலை புகையால் காற்று மாசு;தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை
புஞ்சைபுளியம்பட்டி அருகே இரும்பாலை புகையால் ஏற்படும் காற்று மாசு குறித்து தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி அருகே இரும்பாலை புகையால் ஏற்படும் காற்று மாசு குறித்து தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
புகையுடன் இரும்பு துகள்கள்
புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள பொன்மேட்டில் இரும்பு உருக்காலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இருந்து கரும்புகையுடன் இரும்பு துகள்கள் வெளியேறுவதால் நொச்சிக்குட்டை ஊராட்சி மற்றும் அருகே உள்ள திருப்பூர் மாவட்டம் பேரநாயக்கன்பாளையம் ஊராட்சி பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக தெரிகிறது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதையடுத்து 2 ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களும் நேற்று காத்திருப்பு போராட்டம் அறிவித்து இருந்தார்கள். இதனை தொடர்ந்து பிரச்சினை குறித்து சத்தியமங்கலம் தாசில்தார் சங்கர்கணேஷ் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தை
இந்த பேச்சுவார்த்தையில் புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியளார் விஜயபாலன், கால்நடை மருத்துவர் சரவணன், துணை வேளாண்மை அலுவலர் பாலாஜி, தோட்டகலை உதவி இயக்குனர் பிருந்தா, நொச்சிகுட்டை ஊராட்சி முன்னாள் தலைவர் இளங்கோ, பேரநாயக்கன்புதூர் ஊராட்சி தலைவர் வரதராஜன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
புகை மாசு காரணமாக பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் உடல் உபாதைகள் ஏற்படுகிறது. கால்நடைகள் நோய் தாக்கி இறக்கின்றன. எனவே இரும்பு ஆலையை மூட வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கூறப்பட்டது. இதனையடுத்து இரும்பாலை தரப்பில், கரும்புகை வராமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்கள்.
கரும்புகை வராமல் ஆலையை இயக்க வேண்டும். மீறினால் உயர் அதிகாரிகள் மூலம் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தாசில்தார் தெரிவித்தார். மீண்டும் கரும்புகை வெளியேறினால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று பொதுமக்கள் கூறினார்கள். பேச்சுவார்த்தை காரணமாக காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.