கம்பம் அருகே 18-ம் கால்வாய் தொட்டி பாலம் கட்டும் பணியில் தொய்வு

கம்பம் அருகே 18-ம் கால்வாய் தொட்டி பாலம் கட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்

Update: 2022-07-19 14:08 GMT

கம்பம் பள்ளத்தாக்கு மேற்குப்பகுதியில் உள்ள உத்தமபாளையம், போடி வட்டத்தில் மானாவாரி நிலங்கள் பயன்பெறும் வகையில் 18-ம் கால்வாய் திட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலம் கூடலூர், கம்பம், பாளையம், தேவாரம் வழியாக சுத்தகங்கை ஓடை வரை தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக பல இடங்களில் தரைபாலம், தொட்டி பாலம் அமைக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் முல்லைப்பெரியாறு அணையில் நீர்மட்டம் உயரும் போது 18-ம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும்.

அதன்படி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 18-ம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது கம்பம் அருகே ஊத்துக்காடு மேற்குப்பகுதியில் உள்ள தொட்டி பாலம் உடைந்தது. இதனால் தண்ணீர் புதுப்பட்டியை தாண்டி செல்லவில்லை. இதையடுத்து இடிந்த தொட்டி பாலத்தை பொதுப்பணித்துறையினர் அகற்றினர்.

பின்னர் புதிய தொட்டி பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கியது. பாலம் கட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டு ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. ஓராண்டு ஆகியும் 25 சதவீத வேலை கூட நடைபெறவில்லை. என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் இந்த ஆண்டும் 18-ம் கால்வாயில் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்